அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார் மூத்த அமைச்சர் துரைமுருகன்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் துரைமுருகனை வேலூர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கை வேலூருக்கு மாற்ற வேண்டும் என்று துரைமுருகன் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தன்னை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து துரைமுருகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் துரைமுருகனின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர்.