கடந்த 10 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக (CPI) முத்தரசன் பதவி வகித்து வந்தார். கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறும். இதில் 3 முறை தொடர்ந்து முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் அமிர்ஜான் தெருவில் உள்ள சென்ட்ரல் வங்கி ஊழியர் சங்க விருந்தினர் விடுதி கூட்ட அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடந்தது.
தேசிய நிர்வாக குழு உறுப்பினர் டி எம்.மூர்த்தி தலைமையில் புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாநில துணைச் செயலாளரான மு.வீரபாண்டியனை, 101 உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் என மொத்தம் 110 பேர் ஒருமனதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்தனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி உள்ளிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.வீரபாண்டியனை நமது மின்னம்பலம்.காம் சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.
உங்கள் தந்தை ராணுவ வீரராமே?
ஆம், எனது அப்பா முத்துகிருஷ்ணன் ராணுவ வீரர். அம்மா மின்னலா, ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போதே இருவரும் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். எங்கள் குடும்பத்தில் என்னோடு சேர்த்து மொத்தம் 7 பிள்ளைகள். மூத்தவனான நான் உட்பட 4 பேர் ஆண் பிள்ளைகள். மற்ற மூவரும் பெண் பிள்ளைகள்.
எங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழூவூர் என்ற கிராமம் தான் பூர்வீகம். ஆனால் நான் பள்ளி கல்வியை படிக்கும்போதே வடசென்னையில் உள்ள வியாசர்பாடியில் குடியேறிவிட்டோம்.
கம்யூனிஸ்ட் ஈர்ப்பு எப்படி வந்தது?
நான் படிக்கும்போது, எங்கள் குடியிருப்பு பகுதியில் பிரபலமான ஓவியரான எம்பிளான் இருந்தார். அவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், பெரியார் போன்றவர்களின் படங்களை வரைந்துக் கொண்டிருப்பார். அவரிடம் அங்கிருந்த படத்தைக் காட்டி ’அவர் யார்’ என கேட்கும்போது, அவர் அந்த படத்தில் இருக்கும் தலைவரை பற்றியும், அவர்களை வாழ்க்கை வரலாற்றையும் சொல்லி கம்யூனிஸ்ட் கருத்துகளை என் மனதிற்குள் விதைத்தார்.
அதோடு, ஓவியரை பார்க்க அவ்வபோது அங்கே தோழர் ஏ.எஸ்.கே வந்து போவார். அவர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நான் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஈர்க்கப்பட்டேன்.
யார் அந்த ஏ.எஸ்.கே?
துறைமுகத்தில் தொழிற்சங்க தலைவராக இருந்தவர் தான் ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி. அவரை எல்லோருமே அய்யங்கார் என்று தான் அழைத்து வந்தார்கள். அப்போது பெரியார் தான் ’இனி தோழரை சாதி பெயரை குறிப்பிட்டு அய்யங்கார் என அழைக்க வேண்டாம். ஏ.எஸ்.கே என்று மட்டும் அழைக்கலாம். அது சிறப்பாக இருக்கும்” என்றார். அன்றுமுதல் அவர் மறைந்த பிறகும் இன்று வரையில் அவரை ’ஏ.எஸ்.கே தோழர்’ என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
கட்சியில் நுழைந்தது எப்படி?
பியூசி படிக்கும்போதே நான் மாணவர் கழகத்தில் சேர்ந்தேன். அதன்பிறகு இளைஞர் பெருமன்றத்தில் சேர்ந்தேன். அப்போது முதல் அமைப்பு ரீதியாக செயல்பட தொடங்கினேன். அதன்பின்னர் கட்சியின் கிளை செயலாளர், பகுதி குழு செயலாளர், மாவட்ட செயலாளர் என கட்சியில் படிப்படியாக வளர்ந்து தற்போது மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
உங்கள் அரசியல் பயணத்தில் சந்தித்த போராட்டங்கள்?
1989ஆம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் தோழர் டெல்லி பாபு இறந்துவிட்டார். அப்போது கடுமையான போராட்டத்தை நாங்கள் கட்டமைத்தோம். சிறைக்கு சென்றோம். 1997ல் வேலையின்மை பிரச்சனையை முன்வைத்து ’இந்தியாவை காப்போம், இந்தியாவை மாற்றுவோம்’ என்ற கோஷத்துடன் கன்னியாகுமரி முதல் புது டெல்லி வரையில் சைக்கிள் பரப்புரை மேற்கொண்ட அணியில் நான் பங்கேற்றேன்.
கட்சியில் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினராக செயல்பட்டு, கடந்த 2015ஆம் ஆண்டு மாநில துணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதோடு 2018ம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தவன்.
நாட்டில் இப்போதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது… ‘இந்தியாவை காப்போம், இந்தியாவை மாற்றுவோம்’ என மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பீர்களா?
நாங்கள் பல போராட்டத்தை நடத்தி வருகிறோம். இன்னும் வருங்காலத்தில் போராட்டம் வலுவாக இருக்கும். இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.