மேட்டுப்பாளையம் அருகே 17 வயது சிறுவன் ஒருவன் கஞ்சா போதையில் , விபத்தை ஏற்படுத்திவிட்டு, பொதுமக்களை கத்தியால் மிரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், நேற்று தீபாவளி கொண்டாட்டம் களைகட்டி இருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலங்கொம்பு பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் கஞ்சா போதையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற பிரசாத் என்பவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் சிறுவனைத் துரத்திச் சென்று, வீராசாமி நகர் பகுதியில் அவனது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால், தன்னைப் பின் தொடர்ந்தவர்களைக் கண்ட சிறுவன், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து, அவர்களைச் சரமாரியாகத் தாக்கி உள்ளான். மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளான். இந்தச் சம்பவத்தை செல்போனில் பதிவு செய்தவர்களை கத்தியால் மிரட்டி, அவர்களின் செல்போன்களைப் பறித்து உடைத்துள்ளான்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறுவன், அவர்களையும் தாக்க முயன்றதுடன், “யாராவது தன்னைப் பிடிக்க முயன்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அதே சமயம் சிறுவர்களுக்கு போதைப் பொருட்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ஆலங்கொம்பு பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
