ஹாலிவுட் விருதுகளின் திருவிழாவான 83-வது கோல்டன் குளோப் விருதுகள் (83rd Golden Globe Awards) வழங்கும் விழா, கலிஃபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு முதல் பெண் தொகுப்பாளராக வரலாறு படைத்த நிக்கி கிளேசர் (Nikki Glaser), இந்த ஆண்டும் தொகுப்பாளராகத் திரும்பி விழாவைச் கலகலப்பாக்கினார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு மட்டுமல்லாமல், வரலாற்றிலேயே முதல்முறையாக பாட்காஸ்ட் (Podcast)-க்கும் இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகம்: ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ ஆதிக்கம்
புகழ்பெற்ற இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் (Paul Thomas Anderson) ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ (One Battle After Another) திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முக்கிய 4 விருதுகளைத் தட்டிச் சென்றது.
லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த இப்படம், சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/காமெடி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய விருதுகளை வென்றது.
இப்படத்தில் நடித்த டேயானா டெய்லர் (Teyana Taylor), சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.
மற்ற முக்கிய வெற்றிகள்:
திமோதி சாலமேட் (Timothee Chalamet), ‘மார்ட்டி சுப்ரீம்’ (Marty Supreme) படத்திற்காகச் சிறந்த நடிகராகத் (மியூசிக்கல்/காமெடி) தேர்வு செய்யப்பட்டார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்த ‘சின்னஸ்’ (Sinners) திரைப்படம், சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கான விருதை வென்றது.
தொலைக்காட்சி: ‘அடோலசென்ஸ்’ அசுர வெற்றி
சின்னத்திரையைப் பொறுத்தவரை, ‘அடோலசென்ஸ்’ (Adolescence)த் தொடர் ஆதிக்கம் செலுத்தியது. சிறந்த லிமிடெட் சீரிஸ் உட்பட மொத்தம் 4 விருதுகளைக் குவித்தது.
ஸ்டீபன் கிரஹாம் (சிறந்த நடிகர்), ஓவன் கூப்பர் (சிறந்த துணை நடிகர்), எரின் டோஹெர்டி (சிறந்த துணை நடிகை) ஆகியோர் நடிப்பிற்கான விருதுகளைப் பெற்றனர்.
‘தி ஸ்டூடியோ’ (The Studio) தொடருக்காக செத் ரோகன் (Seth Rogen) சிறந்த நடிகராக (டிவி – மியூசிக்கல்/காமெடி) மகுடம் சூடினார்.
இந்தியப் பெருமை – பிரியங்கா சோப்ரா: ஹாலிவுட் ஜாம்பவான்களான ஜூலியா ராபர்ட்ஸ், ஜார்ஜ் குளூனி ஆகியோருடன் இணைந்து, நம் ஊர் பிரியங்கா சோப்ரா ஜோனாஸும் (Priyanka Chopra Jonas) விழாவில் விருதுகளை வழங்கும் ‘பிரசன்ட்டர்’ (Presenter) ஆகக் கலந்து கொண்டு இந்தியாவக்குப் பெருமை சேர்த்தார்.
முதல் பாட்காஸ்ட் விருது: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த பாட்காஸ்ட் பிரிவில், ஏமி போலர் (Amy Poehler) தனது ‘Good Hang With Amy Poehler’ நிகழ்ச்சிக்காக முதல் கோல்டன் குளோப் விருதை வென்று வரலாறு படைத்தார்.
இந்த வெற்றியாளர்கள் பட்டியல், வரவிருக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!
