கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள தற்போதைய எம்எல்ஏக்கள் 7 பேருக்கு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 23 வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் இன்று (மார்ச்27) 127 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 9 இடங்களில் அதிமுகவும், 1 இடத்தில் பாஜகவும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு சென்ற நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே 9 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவும், ஒரு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவும் இந்த முறை போட்டியிடுகின்றன. அதிமுகவில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
அந்தவகையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு S.P. வேலுமணியும், சூலூர் தொகுதிக்கு கந்தசாமியும், சிங்காநல்லூர் தொகுதிக்கு K.R.ஜெயராமனும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு பி.ஆர்.ஜி. அருண்குமாரும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு தாமோதரனும், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு பொள்ளாச்சி ஜெயராமனும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல கடந்த முறை கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இந்த முறை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இது தவிர மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ ஏகே செல்வராஜ் இந்த முறை போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் போட்டியிடுகிறார்.
வால்பாறை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி உயிரிழந்த நிலையில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் லட்சுமண சிங் என்பவருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி தாளாளரான இவர் கிணத்துக்கடவு பேரூராட்சி வார்டு கவுன்சிலராகவும் இருந்துள்ளார். லட்சுமண சிங்கிற்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போல பாஜகவைச் சேர்ந்த கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் இந்த முறை தொகுதி மாறி கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
