ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீதான வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் தலிபான்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானில் பதுங்கி இருக்கும் தலிபான் தீவிரவாதிகள் தங்களது நாட்டுக்குள் தாக்குதல்கள் நடத்துகின்றனர் என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. இதனை நிராகரிக்கும் ஆப்கானிஸ்தான், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது என பதில் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
இதனால் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அந்நாட்டின் தலிபான் ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை வெள்ளிக்கிழமை நடத்தியது.
இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து எல்லைகளில் ஆப்கான் தலிபான் ராணுவம் அதிரடி பதிலடி தாக்குதல் நடத்தியது. மேலும் பாகிஸ்தானின் முக்கிய காவல் அரண்களையும் தலிபான்கள் கைப்பற்றினர்.
இந்த நிலையில் காபூலில் இன்று (அக்டோபர் 12) தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் தமது நாட்டில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். முக்கிய பயங்கரவாதிகளை உடனே வெளியேற்ற வேண்டும். அந்த பயங்கரவாதிகளை ஆப்கான் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பானது ஆப்கான் உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
எங்கள் நாட்டின் வான்பாதுகாப்பையும் எல்லைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யக் கூடிய உரிமை எங்களுக்கு உண்டு. இதனாலேயே எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தினோம். எங்கள் தாக்குதல்களில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கத்தார் உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்ததால் பாகிஸ்தான் எல்லைகளில் நாங்கள் தாக்குதல்களை நிறுத்தி உள்ளோம் என்றார்.