தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள் 4 உணவுகளை எடுத்துக்கொண்டால், நன்றாக தூக்கம் வரும் என்று கூறுகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
நம்மில் பெரும்பாலானோருக்கு இரவில் தூக்கமின்மை பிரச்னை இருக்கலாம். வேலைப்பளு, மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாக இரவு தூக்கம் வராமல் பலரும் அவதிப்படுவது உண்டு. உடலுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமாகும். உடலின் செல்கள் தூங்கும் நேரத்தில்தான் தன்னை சரிசெய்துகொள்கிறது. மூளை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து நினைவுகளையும், புதிய தகவல்களையும் சேமிக்கிறது. போதுமான தூக்கம் இல்லை என்னும்போது இந்த செயல்பாடுகள் அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. இது உடல்நலனிமும், மனநலனிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தூக்கம் வரவில்லை என்பதற்காக பலரும் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அதற்கு முன்பாக இயற்கையான உணவுப் பொருட்கள் நமக்கு தூக்கத்தை வரவழைக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது இல்லை. தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளும் முன், சில உணவுப் பொருட்கள் எடுத்தால் உங்களுக்கு தூக்கம் நன்றாகவே வர வாய்ப்புகள் உள்ளன. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் நான்கு உணவுகளை நாம் பார்க்கலாம்.
வாழைப்பழம்: இரவு சிற்றுண்டியாக வாழைப்பழத்தை சாப்பிட ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் உள்ளன. அவை தசைகளை தளர்த்தும். டிரிப்டோபான் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனாக மாறுகிறது. தூங்குவதற்கு 30-40 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் உதவியாக இருக்கும்.
சூடான பால் குடிக்கலாம்: தூக்கத்திற்கு முன்பாக சூடான பால் குடிப்பது மிகவும் நல்லது. பாலில் டிரிப்டோபான் மற்றும் கால்சியம் உள்ளது, அவை மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உளவியல் ஆறுதலும் தூக்கம் வருவதற்கு இவை கணிசமாக உதவுகின்றன. அதனுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் ஜாதிக்காயைச் சேர்ப்பது உடல் வீக்கம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவும்.
மாலை நேரத்தில் பூசணி விதைகள் உண்ணலாம்: பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளன. துத்தநாகக் குறைபாடு தூக்கத்தை கணிசமாக பாதிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன . மாலையில் எந்த வடிவத்திலும் 1 முதல் 2 தேக்கரண்டி வறுத்த பூசணி விதைகளை சாப்பிடுவது நன்றாக தூக்கம் வருவதற்கு உதவுகிறது.
கெமோமில் (சீமை சாமந்தி தேநீர்): கெமோமில் எனப்படும் சீமை சாமந்தி தேநீரை தினமும் குடிக்கலாம். கெமோமில் பூக்களில் அபிஜெனின் உள்ளது, இது மூளையின் காமா அமினோ புயூட்டைரிக் காடி ஏற்பிகளை அமைதிப்படுத்துகிறது. கெமோமில் தேநீர் குடித்து வர தூக்கத்தின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தூங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, ஒரு கப் வெதுவெதுப்பான கெமோமில் தேநீரை மெதுவாகக் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
நீங்கள் தூக்கம் வராமல் தவிர்த்தால் இந்த உணவுகளை எடுத்துப் பாருங்கள். அத்துடன் இரவு நேர காபி, கனமான திட உணவுகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதற்கான பலன் 1 – 2 வாரங்களில் தெரியும்.
