பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வரும் நிலையில் கோவை மாநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கோவையில் இன்று 3 போராட்டங்கள் நடைபெற உள்ளது.
தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள இயற்கை விவசாயிகள் மாநாடு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று (நவம்பர் 19) துவக்கி வைக்க உள்ளார்.
தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், மதியம் 1.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசீலிக்க மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு பாதுகாப்பு பணிகள், வழித்தடங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ளிட்ட விசயங்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து கொடிசியா வளாகம் வரை பிரதமரின் கான்வாய் செல்லும் வழித்தடத்தில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கியுடன் கூடிய போலீசார் இருபுறமும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு விஷயங்களை ஆய்வு செய்தனர்.
இதன்காரணமாக அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கோவையில் பிரதமருக்கு எதிராக 3 பேராட்டங்கள்
பிரதமர் மோடி இன்று கோவை வரும் நிலையில் அவருக்கு எதிராக 3 பேராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீகார் மக்களை தமிழர்கள் தாக்கியதாக பொய் பிரச்சாரம் செய்த மோடிக்கு எதிராக முற்போக்கு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அவிநாசி சாலையில் உள்ள மசக்காளி பாளையம் சந்திப்பு பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் போராட்டம் நடைபெற உள்ளது. #Go Back Modi என அழைப்பு விடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் மக்கள் தொகை குறைவாக உள்ளதாக காரணம்காட்டி கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடியை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதேபோல் மெட்ரோ திட்ட ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக இன்று பந்தய சாலை காவல் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
