மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் விடுவிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

AAP

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில், 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் தனியார் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், இதற்காகப் பெறப்பட்ட முறைகேடான பணம் கோவா சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அமலாக்கத்துறை (ED) மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகள் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தன.

ADVERTISEMENT

கைது மற்றும் அரசியல் தாக்கம்:

இந்த வழக்கின் காரணமாகவே அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதும் அவர் முதல்வர் பதவியில் நீடித்தது டெல்லி அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதேபோல், மணீஷ் சிசோடியா மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ADVERTISEMENT

நீதிமன்றத் தீர்ப்பு:

இவ்வழக்கை விசாரித்த ரூஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடரவோ அல்லது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவோ தேவையான அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

நீதிபதி தனது உத்தரவில், அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் சதித்திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார் என்பதை உறுதிப்படுத்த வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும், சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஊகங்களின் அடிப்படையிலேயே உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆம் ஆத்மி கொண்டாட்டம்:

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். “இறுதியில் உண்மை வென்றது” எனக் கட்சி நிர்வாகிகளும், கெஜ்ரிவால் குடும்பத்தினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். சிபிஐ தொடர்ந்த வழக்கில் கிடைத்துள்ள இந்த விடுதலை, அவர்களுக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கண்ணீர் வடித்த கெஜ்ரிவால்

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி அழுதார். பின்னர் கடின உழைப்பின் மூலமும் நேர்மையின் மூலமாகவே மக்கள் நம்பிக்கையைச் சம்பாதித்ததற்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றத் தீர்ப்பு தான் நான் நிரபராதி என்பதற்கு ஆதாரம். உண்மை வெல்லும். அரசியலமைப்பைக் கேலிப்பொருளாக்க வேண்டாம். ஊழல், வேலையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பாஜக ஏன் முயல்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தொடர்ந்த பணப்பரிவர்த்தனை வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share