சென்னையில் தெரு நாய் கடித்ததில் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆட்டோ டிரைவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி தொடங்கி சென்னை வரை தெரு நாய் தொல்லையால் பல்வேறு மாநில மக்களும் பாதிக்கப்படுகின்றனர். தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்… ஒரு தெரு நாயைக் கூட தெருக்களில் பார்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் மாநகராட்சிகள் தெருநாய்களை பிடிக்க திணறி வருகின்றனர்.
தெரு நாய் கடி மற்றும் ரேபீஸ் நோயால் தமிழகத்தில் கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரையிலான 18 மாதங்களில் மட்டும் சுமார் 64 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு 43 பேரும், இந்த ஆண்டு 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 43 ரேபீஸ் இறப்புகளில், 41 பேர் பகுதி அல்லது முழுமையான தடுப்பூசி இல்லாததால் உயிரிழந்திருக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டில் 4.81 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 3.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தசூழலில் சென்னையில் நேற்று (செப்சம்பர் 14) ஒருவர் நாய்க்கடியால் ரேபீஸ் நோய் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ஐஸ்ஹவுஸ் அருகே டாக்டர் பெசண்ட் சாலை பகுதியில் வசித்து வந்தவர் முகமது நஸ்ரூதீன்(50). ஆட்டோ ஓட்டுநர். கடந்த ஜூலை மாதம் ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடந்து சென்ற போது, தெரு நாய் கடித்துள்ளது.
இதையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு திரும்பினார்.
இந்தசூழலில் கடந்த 12ஆம் தேதி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது ரேபீஸ் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தனியறையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நஸ்ருதீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் இந்த ஆண்டு ரேபீஸ் நோயால் உயிரிழந்த 22ஆவது நபர் நஸ்ரூதீன்.
நஸ்ரூதீன் இறப்பு தொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் கே. சாந்தாராம் கூறுகையில், “அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர், ரேபீஸ் தடுப்பூசிகளின் முழு அளவையும் பெற்றிருந்தார். இம்யூனோகுளோபுலின் ஊசிகளையும் எடுத்துக்கொண்டிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் நாய் கடித்த 12 மணி நேரத்திற்குள் ஒரு நபர் தடுப்பூசியைப் பெறவில்லை என்றாலோ அல்லது மீதமுள்ள அளவுகளுக்கான தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்ற தவறினாலோ, அது ஆபத்தானதாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
ஆனால் தனது தந்தை அனைத்து தவனை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டார் என்கிறார் உயிரிழந்த நஸ்ரூதின் மகன் முகமது சம்ரூதின்.
ஊடங்களிடம் அவர் பேசுகையில், “அப்பாவுக்கு சமீப நாட்களாக உடல்வலி,காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், அலர்ஜி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது. இந்தநிலையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள், அப்பாவுக்கு ரேபீஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக கூறினர்.
ஆனால் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை. தனியறையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவர் ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்தினார், அவரது அறிகுறிகள் மோசமடைந்தன” என்று கூறியுள்ளார்.
‘சென்னையில், நாய்க்கடி தொடர்பான புகார்கள் எழுந்தாலும் கூட, சென்னை மாநகராட்சி பெரும்பாலும் இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கிறது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடவோ அல்லது கருத்தடை செய்யவோ தவறிவிடுகிறார்கள், இது கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்’ என சென்னைவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 15) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடிக்கான ஏ.ஆர்.வி மருந்துகள் இருப்பு உள்ளது. இந்தியாவிலேயே அரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடிக்கும், பாம்பு கடிக்கும் மருந்து இருப்பது தமிழ்நாட்டில் தான். நாய்களை கட்டுப்படுத்துவதற்கும், இனப்பெருகக்த்தை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.