தமிழகம் முழுவதும் வீடுகள் முதல் சாலைகள் வரை பல்வேறு இடங்களிலும் மரங்கள் வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது. மனித இனத்தின் வளர்ச்சிக்காகவும், தேவைக்காகவும் மரங்கள் அதிகளவு வெட்டப்படுகின்றன. இது புவி வெப்பமயமாவதை அதிகரிக்கிறது.
சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், நகரமயமாக்கல் என பல காரணங்களால் மரங்கள் அழிக்கப்படுகின்றன. வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் பெரும்பாலும் நடப்படுவது கிடையாது.
இந்தநிலையில் தமிழகத்தை பசுமையாக மாற்ற முக்கிய நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலமகாவும் வனத்துறை உதவியுடனும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 1045 நாற்றுப்பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெருநெல்லி, அத்தி, புளி, நீர் மத்தி, சிசம், வாகை, சொர்கம், வேம்பு, ஈட்டி, காட்டுவா, மகாகனி, அரைநெல்லி என பூர்வீக இனங்களின் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.
இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக 1.55 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
சாலையோரங்களில் மரக்கன்றுகள் சிறியதாக நடப்படுவதாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும் காய்ந்துவிடுகின்றன. இதுபோன்று நடக்காமல் இருக்க, நாற்றுப்பண்ணைகளில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள் 6 அடி உயரம் வரை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு அடி வளரும் போதும் அவற்றை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். ஆறு அடி வளர்ந்த பிறகே அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்து நட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
கிராமங்களில் சாலைகள் அமைக்கும் போது கட்டாயம் இருபுறமும் மரக்கன்றுகள் நட வேண்டும். அப்போதுதான் ஒப்பந்ததாரர்கள் பில்லை க்ளைம் செய்ய முடியும் என்று வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வனத் துறை உதவியுடன் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கும் திட்டமிட்டுள்ளார். கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கும், பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கும் தலா இரண்டு மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு 6 அடி வளர்ந்த கன்றுகளை நட அதிகாரிகள் தயாராகியுள்ளனர்.

கிராமங்களை பசுமையாக்கும் பொருட்டு திறந்தவெளிகளில் மரக்கன்றுகள் நடவும், ஒவ்வொரு ஆண்டும் இந்த பணிகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது.
ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் ஆலோசனையின் அடிப்படையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது சென்னை முழுக்க 2 லட்சம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுத்தார். இதை தற்போது தமிழக முழுவதும் விரிவுபடுத்தியுள்ளார்.
இப்படி மரங்கள் நடப்படுவதன் மூலம் தமிழ்நாட்டை பசுமையாக்குவது மட்டுமின்றி காலநிலை மாற்றத்தை தணிப்பது, காற்றின் தரத்தை மேம்படுத்துவது, மண் வளம், நீர் மற்றும் பல்லுயிர் வளத்தை மேம்படுத்துவது, ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, புவி வெப்பமயமாவதை குறைப்பது, மழை பெறுவது, விலங்குகளுக்கான வாழ்விடம், நிழல் தருதல் என பல பலன்களை பெறலாம்.