SIR மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர் நீக்கம் ? – அண்ணாமலை ஓபன் டாக்

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

தமிழகத்தை பொறுத்தவரை SIR மூலம் 1கோடி வாக்காளர்கள் வரை நீக்கப்படலாம். இது தமிழக தேர்தல் களத்தை நிச்சயமாக மாற்றும் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 9) கோவையில் இருந்து டெல்லி கிளம்பினார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டெல்லி பயணம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, SIR பணிகள் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. எங்கள் தேசிய தலைவர் 12 மாநிலங்களுக்கான கூட்டத்தை கூட்டியிருக்கின்றார் . அதில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கின்றேன். காசி தமிழ் சங்கத்திலும் கலந்து கொள்ள உள்ளேன் என்றார்.

ADVERTISEMENT

மேலும் ஓபிஎஸ் அண்ணாமலை சந்திப்பு குறித்த கேள்விக்கு, “நேற்று ஓபிஎஸ் அமைப்பின் நிர்வாகி குடும்ப விழாவிற்கு சென்றிருந்தேன், அங்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தேன்” என தெரிவித்தார்.

முதல்வராக விஜய் வருவார் என செங்கோட்டையன் சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு,
செங்கோட்டையன் அரசியல் பாரம்பரியம் கொண்டவர்; நிறைய கள அரசியலைப் பார்த்தவர்; நிறைய முறை வெற்றி பெற்றவர் ; யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் . இன்னொரு இடத்திற்கு போய்விட்டார் என்பதற்காக தவறாகவும் பேச வேண்டாம் .

ADVERTISEMENT

செங்கோட்டையன் அவர்களுடைய கட்சியை பற்றி பெருமையாக பேசுவார், அதை அவர்கள் கருத்தாக பார்க்க வேண்டும். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

மேலும் SIR ல் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை வாக்காளர் பட்டியலில் நீக்கம் இருக்கும் என நினைக்கிறோம் என தெரிவித்த அவர், இறந்து போனவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என இருக்கும் பொழுது இந்த அளவு நீக்கம் வர வேண்டும். டிசம்பர் 11ம் தேதிக்குள் தகவல் வரும், டிசம்பர் 20ம் தேதிக்குள் ஒரு முழுமையான வடிவம் கிடைக்கும். இது தொடர்பான மீட்டிங்தான் டெல்லியில் நாளை நடக்கிறது.

ADVERTISEMENT

குறிப்பாக சென்னையில் உள்ள தொகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை நீக்கப்பட வேண்டிய ஓட்டுகள் இருக்கிறது. இது தமிழக தேர்தல் களத்தை நிச்சயமாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு கோடி வாக்குகள் நீக்கம் என்பது நிச்சயம் 12 முதல் 13 சதவீதம் வரை இருக்கின்றது.
தமிழகத்தில் நீக்கம் 10 சதவீதத்தை தாண்டும் பொழுது இந்த பட்டியலை வைத்து தான் கடந்த தேர்தல்களை சந்தித்தோம் என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, திமுகவினர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மென்ட் மோசனுக்கு கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீதிபதி சுவாமிநாதன் இந்திய இறையாண்மைக்கு எதிராக தண்டனை கொடுக்கவில்லை.
லஞ்ச லாவண்யத்தில் இல்லை. அவரது ஒரு தீர்ப்பு திமுகவிற்கு பிடிக்கவில்லை என்பதற்காக இம்பீட்ச்மென்ட் மோஷன் கொண்டு வருவோம் என்று கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவரை நாங்கள் நீக்குவோம் என்றால் ,மற்ற நீதிபதிகளை அச்சுறுத்துவது போலதான் திமுக நடந்து கொள்கிறது என தெரிவித்தார்.

திமுக மூத்த தலைவர்களின் லஞ்ச வழக்குகள் பல இடங்களில் இருக்கிறது, இதை வைத்து தமிழகத்தில் உள்ள மற்ற நீதிபதிகளை திமுக மிரட்டி பார்க்கின்றார்களா என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம் என்றார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் நாளை வெளியில் வருவது குறித்த கேள்விக்கு ,
யாருடைய நிகழ்வாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும், இன்னொரு முறை தவறாக நடந்தால் அரசியல் மீதே மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள், காவல்துறை கண்ணியமாக இதை நடத்துவார்கள் என நினைக்கிறோம் என தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share