அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர் தொடர்ந்து நீடித்தால், சோயாபீன், நிலக்கடலை, பிண்ணாக்கு உள்ளிட்ட பொருட்களை இந்தியாவால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்பதால் இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகள் பிரகாசமாயுள்ளன.
அமெரிக்க பிண்ணாக்குக்கு சீன அரசு வரியை உயர்த்தியுள்ளது. இதை இந்தியா சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வாய்ப்புகளைக் கைப்பற்றும் என்று வர்த்தகத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வர்த்தகத் துறை அதிகாரி ஒருவர் ‘எகனாமிக் டைம்ஸ்’ ஊடகத்திடம் பேசுகையில், “இதே நிலை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால், வரி விதிப்புகளால் சோயா, சோயா பிண்ணாக்கு, நிலக்கடலை, நிலக்கடலை பிண்ணாக்கு போன்றவற்றைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய நமக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அமெரிக்கா இல்லாத காரணத்தால் விலைகளும் நமக்குச் சாதகமாக அமையும்” என்று கூறினார்.
சோயாபீன், ரசாயனப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் போன்ற அமெரிக்க சரக்குகளுக்கு சீனா 25 விழுக்காடு கூடுதல் வரியை விதித்துள்ளது. ஆனால், ஆசியா பசிபிக் பிராந்தியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன் உள்ளிட்ட பொருட்களுக்கான வரியைச் சீனா குறைத்துள்ளது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், தென்கொரியா, லாவோஸ் ஆகிய நாடுகளும் அடங்கும். ஆகையால் சீனாவுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சோயாபீன் சரக்குகளையும், 50 மில்லியன் டாலர் மதிப்பிலான நிலக்கடலை சரக்குகளையும் ஏற்றுமதி செய்வதற்கான நம்பிக்கையில் இந்தியத் தொழில் துறை உள்ளது.
தற்போதைய நிலையில், சோயாபீன் எண்ணெய், சோயாபீன் மாவு போன்றவற்றைச் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதில்லை. எனினும், சோயாபீன் பிண்ணாக்கை மிகக் குறைவான அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.









