வைஃபை ஆன் செய்ததும், ‘காற்று திசை மாறுதே’ என முன்னோட்டம் கொடுத்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னப்பா அரசியல் வானிலை அறிக்கையா?
ஆமாய்யா.. சனிக்கிழமை மாலையில் தொடங்கி இப்போது வரைக்கும் ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது அந்த ஒரு சந்திப்புதான்..
என்னய்யா.. வெளிப்படையாகவே சொல்லும்..
ம்.. சொல்றேன்.. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் திடீரென சந்தித்து பேசினார் என்பதுதான் அந்த தகவல்.

என்னப்பா.. புது ரகமா இருக்கே..
இந்த சந்திப்பு பற்றி, விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம் கேட்ட போது, “சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஆபீசில்தான் விஜய்யை சு.வெங்கடேசன் எம்.பி. சந்தித்து பேசுனாரு என்கின்றனர்.
சு.வெங்கடேசனை தொடர்பு கொண்டு கேட்டால், “அப்படியா? அப்படி எல்லாம் இல்லையே” என்கிறார்.
ஆனால் விஜய் தரப்பு, சு.வெங்கேடசன் சந்தித்தது உண்மைதான்.. நீண்ட நேரம் இருவரும் பேசியதும் உண்மைதான்.. இருவரும் சுமார் 2 மணிநேரம் சீரியசாக பேசிக் கொண்டிருந்தனர் என சொல்லுது..
விஜய்க்கும் சு.வெங்கடேசனுக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கிறதா?
இருக்குதுய்யா.. சு.வெங்கடேசனின் வேள் பாரி நாவலை இயக்குநர் ஷங்கர் படமாக்குகிறார் இல்லையா.. இது பல பார்ட்டாக எடுக்க ப்ளான் பண்ணி இருக்காங்க.. இதுல ஒரு பார்ட்-ல் விஜய் நடிப்பதாக பேச்சும் இருந்தது.. ஆனால் வேள்பாரி கேரக்டர் இறந்துவிடுவதாக கதாபாத்திரம் இருப்பதால் விஜய் தவிர்த்துட்டாராம்.. அதுனால சினிமா பற்றியும் விஜய்யும் சு.வெங்கடேசனும் பேசியிருக்கலாமோ? என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்புறாங்க.
அதுசரி.. எதுவாக இருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால தெருவுக்கு வந்துதானே ஆகனும்..
அப்படித்தான்.. அரசியலில் இன்னொரு மூவ்-ம் ரொம்பவே பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது..

அது என்னப்பா?
பாஜக- அதிமுக கூட்டணியானது பாமகவின் ராமதாஸ்- அன்புமணி பிரிவுகளுடன் ‘நூதனமான’ டீலிங் பேசிக் கொண்டிருக்கிறது..
‘கூட்டணி பேச்சுவார்த்தை’ன்னா ஓகே.. அதென்னய்யா ‘நூதனமான’ டீலிங்?
பாஜக தலைவர்கள், பாமகவின் ஒரு பிரிவு தலைவரான அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருக்காங்க.. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜக தலைவர்கள் நம்மிடம் கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரையும் அப்பா பாமக, மகன் பாமக இரண்டுமே எங்க கூட்டணியில்தான் இருக்க வேண்டும்.. அதுக்குதான் மகன் பாமகவுடன் (அன்புமணி) பாஜகவும் அப்பா பாமகவுடன் அதிமுவும் பேச்சுவார்த்தை நடத்துது” என்கின்றனர்.

அன்புமணிக்கு நெருக்கமானவர்களும் இதை உறுதி செய்ததுடன், “பாஜக- அதிமுக கூட்டணியில் எங்களுக்கு 15 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் என கேட்கப்பட்டுள்ளது. இதைத்தான் சின்னய்யாவும் (அன்புமணி) சொல்லி இருக்கிறார்” என்கின்றனர்.
இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிசாமி தரப்பு, அப்பா பாமகவுடன் – ராமதாஸுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.
அப்ப, அப்பா பாமக திமுக பக்கம் போகலையா?
திமுக கூட்டணியில் ராமதாஸ் பாமகவை சேர்ப்பது பற்றிய பேச்சு இருந்ததுதான்..
ஆனால் திமுக கூட்டணியில்தான் திருமாவளவன் இருக்கிறாரே.. அதனால இது எப்படி சரியா வரும்னு எந்த மூவ் மெண்ட்டும் இல்லாமல் சைலண்ட்டாகவே இருந்தாங்க..
ராமதாஸைப் பொறுத்தவரையிலும் திமுக பக்கம் போவதில்தான் ஆர்வமா இருந்தாரு.. இந்த நேரத்துலதான எடப்பாடி பழனிசாமி உள்ளே நுழைந்து, ஆத்தூர் இளங்கோ மூலமாக ராமதாஸிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறாரு..
பாமகவுல ஜிகே மணி, அருள் எம்.எல்.ஏ. வும் அதிமுக கூட்டணிக்கு போகலாம்னு டாக்டர் ராமதாஸை கன்வீன்ஸ் செஞ்சுகிட்டு இருக்காங்க.. என்கின்றன தகவல்கள்.

ஓஹோ..
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் பாமகவுக்கு மொத்தம் 23 சீட் கொடுத்தாங்க.. இந்த முறை ராமாதாஸ், அன்புமணி இரண்டு தரப்பும் சேர்த்து எத்தனை சீட் வாங்க போகுது? அன்புமணியை விட ராமதாஸ் குறைவான சீட்டுக்கு ஒத்துக்க மாட்டாருங்கிற போது எப்படி சீட் ஷேரிங் இருக்கும்? பாமகவுல எந்த அணி ராஜ்யசபா சீட்டை வாங்கப் போகுது? என்பதுதான் இப்போதைக்கு பாமகவில் களைகட்டும் பட்டிமன்றம் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
