உதயன் ரத்தோர்
2019ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேச்சாளர்களோ கடந்த இரண்டு ஆண்டுகள் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர். வேலைவாய்ப்பு உருவாக்கம் முடங்கிவிட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளில் ‘வேலையில்லா வளர்ச்சி’ நிலையை இந்தியா சந்தித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகளும், விமர்சகர்களும் கூறுகின்றனர். எனினும், இந்த விவகாரம் குறித்து பல்வேறு தகவல்களைக் கொண்டு மிண்ட் ஊடகம் ஒரு ஆய்வை நடத்தியது. வேலையில்லா வளர்ச்சி என்ற குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிகிறது. எனினும், ஊதியத்துடனான வேலைகள் (முறைசார்ந்த வேலைகள்) உருவாக்கப்படுவதில் வேகக் குறைவு ஏற்பட்டுள்ளது.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் இரண்டு ஆய்வுகள் தரும் தகவல்களின்படி, 2004-05ஆம் ஆண்டுக்கும் 2011-12ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட முறைசார்ந்த வேலைகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 25 லட்சமாக மட்டுமே இருந்துள்ளது.
Annual Survey of Industries (ASI) மற்றும் Centre for Monitoring Indian Economy (CMIE) சேகரித்துள்ள தகவல்களும் முறைசார்ந்த துறையில் இந்த அளவிலான வேலைவாய்ப்புகள்தான் உருவாகியுள்ளன என்பதை உறுதி செய்கின்றன. 2011-12ஆம் ஆண்டுக்குப் பிறகு கார்பரேட் நிறுவனங்களில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி வலுவாகக் குறைந்துவிட்டது. பிறகு ஏற்றப் பாதையில் கார்பரேட் வேலை உருவாக்கம் இருந்தாலும்கூட, 2011-12ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த வேகத்தை எட்டவில்லை.
பிராவிடண்ட் ஃபண்ட், ஓய்வூதியம், சுகாதாரக் காப்பீடு, மகப்பேறு கால பலன்கள் போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகளைப் பெற்ற முறைசார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து வந்துள்ளது. 2004-05ஆம் ஆண்டில் முறைசார்ந்த ஊழியர்களில் சுமார் 50 விழுக்காட்டினருக்கு ஏதோ ஒரு சமூகப் பாதுகாப்பு வசதி கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. இந்த விகிதம் 2011-12ஆம் ஆண்டில் 45 விழுக்காடாகவும், பின்னர் 2016ஆம் ஆண்டில் 38 விழுக்காடாகவும் சரிந்துவிட்டது.
ஐ.சி.இ. சர்வே தகவல்களின் படி, 2016ஆம் ஆண்டில், ஊதியம் பெறும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கினரிடம் எழுத்து ரீதியான ஒப்பந்தம் இல்லை. ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினரிடம் பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் இல்லை. EPFO (Employees Provident Fund Organization) அமைப்பின் கடும் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளில் பிராவிடண்ட் ஃபண்ட் சலுகைகளுடனான முறைசார்ந்த ஊழியர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இந்த அமைப்பிடம் மொத்தம் 6 கோடிக் கணக்குகள் (சந்தாதார்) இருப்பதாகவும், 2017ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஒரு கோடி கணக்குகளை இணைத்ததாகவும் இந்த அமைப்பு கூறுகிறது.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 3 கோடிக் கணக்குகளை EPFO அமைப்பு இணைத்துள்ளதாக அண்மையில் வெளியாகிய அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களைக் கொண்டுதான் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அரசு கூறி வருகிறது. எனினும், ஊதியம் பெறும் ஊழியர்களிடையே பிராவிடண்ட் ஃபண்ட் சலுகைகள் அதிகரித்திருப்பதையே இத்தகவல்கள் உறுதி செய்கின்றன. 2016ஆம் ஆண்டில் 5.4 கோடி முறைசார்ந்த ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட் சலுகைகளின்றி இருந்துள்ளனர். இப்போது அவர்களில் வெகுசிலருக்கு மட்டும் பிராவிடண்ட் ஃபண்ட் பலன்கள் கிடைத்துள்ளது என்று கூறலாம். இதையும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் நமது ஆட்சியாளர்கள் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
முறைசார்ந்த வேலைகளை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதிலும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் தகவல்களின் படி, முறைசார்ந்த பணிகளில் கல்விபெற்ற நில உரிமைக் குடும்பங்களின் பங்கு 2004-05ஆம் ஆண்டில் குறைவாக இருந்ததாகவும், 2011-12ஆம் ஆண்டில் மேலும் குறைந்ததாகவும் தெரிகிறது. முறைசார்ந்த பணிகளில், சிறு மற்றும் குறு நில உரிமை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் குறைந்தது உயர்மேனிலைக் கல்வி அல்லது டிப்ளமோ படித்தவர்களின் பங்கு, அதே கல்வித் தகுதி பெற்ற பெருநில உரிமைக் குடும்பங்களின் பங்கை விட உயர்வாக உள்ளது. எனினும், பெருநில உரிமைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் முறைசார்ந்த பணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே, ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நில உரிமை பெற்றவர்கள் மற்றும் கல்வி கற்றவர்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இவர்களில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர் என்பது நினைவுகூரத்தக்கது.
மொத்தமாக, இத்தகவல்களை வைத்துப் பார்த்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது மகிழத்தக்க நிலையில் இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
**நன்றி:** [லைவ் மிண்ட்](https://www.livemint.com/Politics/BFASnfvkU1rxaGCYPYbIqN/The-signal-and-the-noise-in-Indias-jobs-data.html)
**தமிழில்: அ.விக்னேஷ்**
**முந்தைய கட்டுரைகள்:**
[பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் – 1)](https://minnambalam.com/k/2018/07/12/37)
[பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் – 2)](https://minnambalam.com/k/2018/07/12/70)
[பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் – 3)](https://minnambalam.com/k/2018/07/12/114)
,”
