இந்திய தொழில்நுட்ப உலகில் ஒரு பரபரப்பான பயணத்தை மேற்கொண்ட ZOHO அரட்டை செயலி, அறிமுகமான குறுகிய காலத்தில் உச்சம் தொட்டு, இந்திய மெசேஜிங் சந்தையில் ஒரு சவாலாக உருவெடுத்தது.
ZOHO அரட்டை செயலி உருவானது எப்படி?
சென்னையைத் தளமாகக் கொண்ட ZOHO கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது ‘அரட்டை’ செயலி. ஜனவரி 2021-ல் தொடங்கப்பட்டது. ZOHO ஊழியர்களுக்கான அந்த நிறுவனத்துக்கு மட்டுமேயான ஒரு தொடர்பு ஊடகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய டேட்டாக்கள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘சுதேசி’ டிஜிட்டல் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முன்னெடுப்புக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
செப்டம்பர் 2025 இல், மத்திய அரசின் ஆதரவு, அரட்டை செயலிக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மத்திய அரசு, உள்நாட்டு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் அரட்டை செயலிக்கு வலுவான ஆதரவு அளித்தது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் போன்ற முக்கிய அமைச்சர்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அஷ்வினி வைஷ்ணவ், மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்டிற்கு மாற்றாக சோஹோ ஷோவைப் பயன்படுத்தி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியது, உள்நாட்டு தயாரிப்புகளின் மீதான நம்பிக்கைக்கு ஒரு சான்றாக அமைந்தது. உச்சநீதிமன்றமும் கூட ஒரு வழக்கில் வாட்ஸ் அப்-க்கு பதிலாக ZOHO அரட்டை செயலியை பயன்படுத்தலாம் எனவும் கூறியிருந்தது கவனத்துக்குரியது.
பிரதமர் நரேந்திர மோடியின் ”மேக் இன் இந்தியாவுக்கான’ முன்னெடுப்பு, அரட்டை செயலிக்கு முக்கியத்துவத்தை உருவாக்கிய்து. வாட்ஸ்அப்பிற்கு ஒரு நம்பகமான மாற்றாக அரட்டை செயலியைப் பயன்படுத்துமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். இந்த ஆதரவினால், செப்டம்பர் 2025 இல், அரட்டை செயலில் பதிவுசெய்பவர்களின் எண்ணிக்கை வெறும் 3,000 இலிருந்து 3,50,000 ஆக உயர்ந்தது.
இந்திய ஆப் ஸ்டோர்களில் அரட்டை செயலி முதல் இடத்தைப் பிடித்து, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமை பின்னுக்குத் தள்ளியது.
அரட்டை செயலி, வாட்ஸ்அப்பில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும் பல தனித்துவமான பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

அரட்டை செயலியின் அனைத்து டேட்டாவும் இந்தியாவிலேயே உள்ள சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன. இது குறைவான மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி வேகமாக லோட் ஆகிறது. கூகிள் மீட் அல்லது ஜூம் போன்ற வீடியோ கான்ஃபரன்சிங் போன்ற வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சங்கள் அரட்டை செயலில் இணைக்கப்பட்டன. 2 GB வரை பைல்களை ஷேர் செய்ய முடியும். மெட்டா ஏஐ (Meta AI) போன்ற செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் அரட்டை செயலியில் இல்லை.
செப்டம்பர் 2025 இல், இந்திய ஆப் ஸ்டோர்களில் முதல் இடத்தைப் பிடித்து, 7.5 மில்லியன் பதிவிறக்கங்கள் மற்றும் 1 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைத் தாண்டிய அரட்டை செயலியின் புகழ், சமீபத்திய தகவல்களின்படி கணிசமாகக் குறைந்துள்ளது.

நவம்பர் 4, 2025 நிலவரப்படி, அரட்டை செயலி இந்தியாவின் கூகிள் பிளே ஸ்டோரில் 105 வது இடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 123 வது இடத்திலும் உள்ளது. யூசர்ஸ் அதிகரிப்பை சமாளிப்பதில் சில தொழில்நுட்ப சிக்கல்களையும் சோஹோ ஒப்புக்கொண்டது.
சோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு, ஜனவரி 2025 இல் தலைமை செயல் அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) முழு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். கிராமப்புறங்களில் அலுவலகங்களை அமைத்து, எளிமையான பின்னணி கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அவரது கொள்கையாகும்.
அரட்டை செயலியில் சோஹோவின் ஜியா ஏஐ (Zia AI) மூலம் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை ஒருங்கிணைக்க சோஹோ திட்டமிட்டுள்ளது. சோஹோ பே (Zoho Pay) உடன் அரட்டை செயலியை ஒருங்கிணைத்து, யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளைச் சாத்தியமாக்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
அரட்டை செயலி குறித்து கூகுள் நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும், அரட்டை செயலி ஒருமுறை கூகிள் மீட்ஸ் மெசஞ்சரை ஆப் ஸ்டோர் தரவரிசையில் குறுகிய காலம் மிஞ்சியது. இது இந்திய மெசேஜிங் சந்தையில் ஒரு போட்டியாளராக அரட்டை செயலி இருந்ததை வெளிப்படுத்தியது.
ஸ்ரீதர் வேம்புவின் தொலைநோக்குடன், அரட்டை செயலி எதிர்காலத்தில் ஒரு ‘சூப்பர் ஆப்’ ஆக உருவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
