சாலை விபத்தில் காலை இழந்த இளைஞர் : ரூ.91 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

Published On:

| By Kavi

Youth who lost his leg in a road accident

நெடுஞ்சாலை விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு ரூ,91 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ஹக்கீம் என்ற இளைஞர் கடந்த 2013ஆம் ஆண்டு விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு வயது 20. இன்ஜினியரிங் படித்து வந்தார்.

நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் திடீரென பிரேக் போட்டதால், அந்த காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முகமது ஹக்கீமும் அவரது நண்பரும் கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த பேருந்து ஹக்கீம் மீது ஏறியதால் அவரது இடது கால் துண்டானது.

ADVERTISEMENT

இந்தநிலையில் மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் (MACT) முகமது ஹக்கீமுக்கு 91.62 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதே சமயம் ஹக்கீம் லைசன்ஸ் இல்லாமல் வாகன ஓட்டியது உள்ளிட்ட காரணங்களால் இழப்பீட்டு தொகை 20 சதவிகிதம் அதாவது 73.29 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது இழப்பீட்டு தொகையை சென்னை உயர் நீதிமன்றம் 58.53 லட்சமாகக் குறைத்தது. அதாவது 40 சதவிகித தவறு கார் ஓட்டுநர் மீதும், 30% பேருந்து ஓட்டுநர் மீதும், 30% மேல்முறையீட்டாளர் மீதும் வைத்து இந்த இழப்பீட்டை நிர்ணயித்தது.

ADVERTISEMENT

இதை எதிர்த்து ஹக்கீம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஜூலை 29) விசாரித்தது.

அப்போது, இந்த விபத்துக்கு கார் ஓட்டுநர் அலட்சியம் தான் காரணம். அவர் இதற்கு 50 சதவிகிதம் பொறுப்பேற்க வேண்டும். அதனால் சென்னை உயர் நீதிமன்ற நிர்ணயித்த 40 சதவிகித பொறுப்பு 50 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் 30% பொறுப்பேற்க வேண்டும்

மனுதாரர் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு செல்லாதது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதால் அவர் 20 சதவிகிதம் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதன்படி மொத்தமாக ரூ.91,39,253/- இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பின் போது, “நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்வது அவசியம்தான். ஆனால் ஒரு ஓட்டுநர் தனது வாகனத்தை நிறுத்த விரும்பினால், சாலையில் பின்னால் வரும் பிற வாகனங்களுக்கு எச்சரிக்கை அல்லது சமிக்ஞையை கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் அத்தகைய எச்சரிக்கையை கார் ஓட்டுநர் கொடுக்கவில்லை” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share