தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்சனையால் பார்வார்ட் பிளாக் நகரச் செயலர் சதீஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான கல்குவாரி சங்கிலிக்கரடு பகுதியில் உள்ளது. இந்த குவாரியில் கல் உடைத்து எடுக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு தேனி மாவட்ட பார்வார்ட் பிளாக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் குமார் (40). இவர் கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சதீஷ் குமார் தேசிய பார்வார்ட் பிளாக் கட்சியின் நகர செயலாளராகவும் இருந்து வந்தார்.
இவரது சொந்த ஊர் காமயகவுண்டன் பட்டி. இதனால் இவர் சங்கிலிக்கரடு பகுதியில் கல் உடைக்க தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இதற்காக அவர் சார்ந்திருந்த பார்வார்ட் பிளாக் கட்சியினருடன் இணைந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றார்.
மேலும் அப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொள்ளையடிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
இதனால் சதீஷ்குமாருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அங்கு வந்த சதீஷ் குமாருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பை சேர்ந்த சின்னசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ் குமாரை குத்தியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயம் அடைந்த சதீஷ் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சதீஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என சதீஷ் குமார் குடும்பத்தினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
5 பேர் கைது
சதீஷ் குமார் கொலை வழக்கில் பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீது ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்கில் சின்னசாமி, இளங்கோவன், மணிமாறன், குரு, அல்லி பாலா ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்குவாரி பிரச்சனையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.