திருச்சியில் இன்று (நவம்பர் 10) காலை போலீஸ் குடியிருப்பில் உள்ள எஸ்எஸ்ஐ வீட்டிற்குள் புகுந்து இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி பீமா நகர், கீழ தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 25). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பீமா நகர் மார்சிங் பேட்டை வழியாக இன்று காலை தாமரைச்செல்வன் சென்றபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து தகராறு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாமரைச்செல்வன் அருகே இருந்த போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்து தப்பி ஓட முன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை தொடர்ந்து துரத்தியதால் தாமரைச்செல்வன் அங்கிருந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கும் சென்ற கும்பல் தாமரைச் செல்வனை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தாமரைச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைக்கண்ட எஸ்எஸ்ஐ செல்வராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் அலறியதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 5 பேரில் ஒருவரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து காவலர் குடியிருப்பில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த கும்பல் இளைஞரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி சென்றுள்ள நிலையில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
