தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளை தொடங்கி உள்ள நிலையில் வைகோ மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நடைபெறும் என அறிவித்தது. இதற்கான பணிகள் தமிழகத்தில் கடந்த 4 ம் தேதி தொடங்கி உள்ளது.
இந்நிலையில் SIRக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை என்பது மக்களின் வாக்குரிமையை பறிப்பதாக அமையும். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் அவசர கதியில் SIR நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நாளை (நவம்பர் 11) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
