நகை திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர், “போலீசார் அடித்த அடிக்கு நகை எடுத்திருந்தால் என் அண்ணன் கொடுத்திருப்பார். அவர் நகையை எடுக்கவில்லை. அரசு சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். Youth dies during police investigation
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு காவலாளியாக அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் அஜித் குமார் பணியாற்றி வந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா தனது அம்மாவுடன் கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்த கோயிலுக்கு வழிபாடு செய்ய காரில் வந்தார்.
இந்தநிலையில், தங்களது காரை பார்க்கிங் பகுதியில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவி கொடுத்ததாகவும், பிறகு வந்து பார்த்தபோது பின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்றும் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அஜித் குமாரை கோயில் ஊழியர்களும் நிகிதாவும் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து திருப்புவனம் காவல்நிலையத்துக்கு அஜித்குமார் அம்மா மாதவி சென்றுள்ளார். அப்போது, நகையை நான் திருடவில்லை என்று அஜித் கூறியதாக ஊடகங்களுக்கு மாதவி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
திருப்புவனம் காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட விசாராணையை தொடர்ந்து மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து ஜூன் 28ஆம் தேதி பத்ரகாளியம்மன் கோயில் பின்புறத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது அவரை போலீசார் கடுமையாக தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர். பின்னர் அங்கிருந்துதான் அஜித்குமாரை போலீசார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதாக தகவகள் வருகின்றன.
இந்நிலையில், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அஜித் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் அண்ணன் உயிரிழந்தது தொடர்பாக தம்பி நவீன் குமார் பிபிசியிடம் கூறுகையில், “என் அண்ணனுக்கு கார் ஓட்ட தெரியாது. சாவியை அஜித்தின் நண்பர்கள் அருண்குமார், வினோத் குமார் ஆகியோரிடம் கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் இருவரும் காரை பார்க்கிங்கில் விடாமல் நீண்ட தூரம் எடுத்துச் சென்று வந்திருக்கிறார்கள். கேட்டதற்கு பார்க்கிங்கில் இடம் இல்லாததால் நீண்ட தூரம் எடுத்துச் சென்று நிறுத்தி வைத்திருந்து பின் எடுத்து வந்ததாக கூறியிருக்கிறார்கள்.
இந்த தகவலை அஜித் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து மானாமதுரை குற்றப்பிரிவு காவல் துறையினர், என்னையையும் , அருண்குமார், வினோத் குமார், பிரவீன் குமார், அஜீத் குமார் ஆகியோரையும் மடப்புரம் கண்மாய் கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் காரை எடுத்துச் சென்ற அருண்குமார், வினோத் குமாரிடம் போலீசார் தனிதனியாக விசாரித்தனர். அவர்கள் நகையை பார்க்கவில்லை கூறியதால் போலீசார் யாருக்கோ போன் செய்து, காரில் நகை இருந்தது உண்மையா என்று கேட்டனர்.
அவர்கள் காரில் நகை இருந்தது உண்மைதான் என்று கூறியதால் அஜித்திடம் கேட்டும் கடுமையாக அடித்தனர். எங்களையும் போலீசார் அடித்தனர்.
பின்னர் அடி தாங்க முடியாமல் அஜித் நகையை திருடியதாகவும் அதை கோயில் பின் புறத்தில் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்திருப்பதாகவும் கூறினார். இதையடுத்து எங்கள் நால்வரையும் வேனில் இருக்கவைத்துவிட்டு போலீசார் அஜித்தை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின் போலீசார் அஜித்தை தூக்கி கொண்டு மற்றொரு வாகனத்தில் சென்றதை பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.

மற்ற ஊடகங்களிடம் பேசிய நவீன் குமார், ”கார் சாவியை கையில் வைத்திருந்த ஒரே காரணத்தினால் என் அண்ணன் அஜித் குமாரை சந்தேகப்பட்டு போலீசார் அழைத்துச் சென்றனர்.
நகையையே எடுத்திருந்தாலும் அடித்து கொல்வது சரியா? அண்ணனின் உடலை பார்த்தபோது அவரது இரண்டு காதிலும் ரத்தம் இருந்தது. அவரை பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து நாங்கள் வெளியே வந்துவிட்டோம்.
அண்ணனை அடித்து கொன்ற காவலர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது. அடித்த அடிக்கு நகையை எடுத்திருந்தால் கொடுத்திருப்பார்.
மாட்டுக்கொட்டகையில் வைத்து அண்ணனிடம் என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. விசாரணைக்கு போகும்போது அண்ணன் நடந்துதான் சென்றார். நான் மடபுரம் வருவதற்குள் அண்ணன் உடல் மருத்துவமனையில் இருப்பதாக எனக்கு தகவல் வந்தது” என்று தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அஜித் உயிரிழந்தது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி வேங்கட பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். நீதிபதியின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட காவலர்கள் கைது செய்யப்படலாம் என சிவகங்கை போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. Youth dies during police investigation