தமிழக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ்-ஐ பார்த்து, ‘உங்களுக்கு ஓபிஎஸ் என்றாலே பிடிக்காது’ என்று கிண்டலாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நேற்று முதல் நடந்து வருகிறது.
இன்று நடந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால் அதை செயல்படுத்தவில்லை. அரசுக்கு எதிராக பல்வேறு சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “பங்களிப்பு குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டதே அதிமுக ஆட்சி காலத்தில் தான். இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக தான்” என்று கூறினார்.
மேலும் அவர், “உங்களுக்கு ஓபிஎஸ் என்றாலே பிடிக்காதுதான். ஆனால் இந்த ஓபிஎஸ் (old pension scheme) வேறு” என்று நகைச்சுவையாக கூற, அவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எங்கள் மீது பழியை சுமத்த வேண்டாம். மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த காலத்தில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது” என்று பதிலளித்தார்.
மேலும், குடிமராமத்து திட்டம், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டம் ஆகியவை குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
