தமிழ் சினிமா நடிகர்கள் வேறு யாரும் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு திரைப்படங்களில் பாடி ஷேமிங் செய்யப்பட்டவர் யோகிபாபு.
தனது ஆரம்பகாலப் படங்களில் அத்தனையையும் பொறுத்துக் கொண்டு முன்னேறி , காமெடியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் யோகிபாபு . விளைவு அஜித் , விஜய் , ரஜினி படங்களில் அவர்களையே கலாய்க்கும் அளவுக்கு அவரது மார்க்கெட், பாகுபலி ராக்கெட் போல எகிறியது .
அடுத்த கட்டமாக கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்து , அப்புறம் கதாநாயகனாகவும் உயர்ந்தார் . ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் நடிப்பு ; நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கம் என்ற இடத்துக்குப் போனார் . சம்பளத்தில் பாதியைக் கொடுத்தால் நான்கு ஐந்து நாள் கால்ஷீட்.அப்புறம் காத்திருந்து தேதி பெற வேண்டும் என்ற அளவுக்கு அவருக்கு டிமாண்ட் ஏற்பட்டது .
ஆரம்பத்தில் அவர் கதையின் நாயகனகவோ கதாநாயகனாகவோ நடித்த சில படங்கள் ஓடின. அப்புறம் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை.
”நான் எப்போதோ ஓரிரு காட்சியில் நடித்த படங்களை எல்லாம் அதன் தயாரிப்பாளர்கள் இப்போது நான் ஹீரோவாக நடித்த மாதிரி விளம்பரம் செய்து ரிலீஸ் செய்கிறார்கள். அதனால் மக்கள் அந்தப் படங்களைப் பார்த்து ஏமாந்ததன் விளைவே எனது பின்னடைவு” என்றார் யோகிபாபு .
கொஞ்ச நாளாக யோகிபாபு நடித்த படங்கள் வராத நிலையில் , இப்போது ஒரு படம் ரிலீசுக்கு வருகிறது.

கே பாலையா இயக்கத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க,”காவல்துறை உங்கள் நண்பன்”படத்தைத் தயாரித்த நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக இருக்கும் என்கிறது படக் குழு .
படத்துக்குப் பேர் இன்னும் வைக்கல.
இருக்கட்டும் . பேரே வைக்காமல் ரிலீஸ் பண்ணினால் கூடப் பண்ணட்டும் . ஆனால் இந்தப் படத்திலாவது நீண்ட இடைவேளைக்குப் பிறகு யோகிபாபு சிரிக்க வைக்கட்டும்
- ராஜதிருமகன்
