12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று (ஏப்ரல் 21) ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு எதிரான POSCO சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை வழங்கியுள்ள புதிய ஒப்புதலில் கூறப்பட்டுள்ளதாவது:
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தால் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறைதண்டனையும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்படவுள்ளது.
அதேபோல், 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தால் 10 ஆண்டுகள் சிறை என்றிருந்த குறைந்தபட்ச தண்டனை தற்போது 20 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படவுள்ளது. தற்போது இந்த புதிய திருத்தச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக பெண்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலிலேயே இந்த சட்டத்திருத்த நடவடிக்கை!
கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் இடாஹ் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 20) 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அதே மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
