கவிஞர், பேச்சாளர், சிந்தனையாளர் நந்தலாலா பெங்களூரு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இன்று (மார்ச் 4) இயற்கை எய்தினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்துள்ளார். இறுதிச்சடங்கு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என த.மு.எ.க.ச. மாநிலக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.writer nandalala died
வங்கியில் பணியாற்றிய நந்தலாலா, கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மேடைகளில் முழங்கியவர். அதைத் தொடர்ந்து பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் மேடைகளிலும் தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் பேசியவர்.
பல தொலைக்காட்சிகளில் தன் சிந்தனைகளால் பகுத்தறிவுக் கருத்துக்களையும், அறிவுப்பூர்வமான சிந்தனைகளையும், யதார்த்தமான நகைச்சுவைகளையும், உருக்கமான வாழ்வியல் செய்திகளையும் விதைத்தவர். ஆரம்பத்தில் லியோனி தலைமையிலான பட்டிமன்றக் குழுவில் இடம்பெற்ற நந்தலாலா, பின்னர் அவரது தலைமையிலேயே பட்டிமன்ற குழுவையும் நடத்தி வந்தார்.writer nandalala died
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக நந்தலாலா இருந்துள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
சில மாதங்களாகவே இதயம் தொடர்பான தொடர்பான உடல் நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். திருச்சி கருமண்டபத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிலாகிவிட்ட நந்தலாலாவுக்கு இரு மகள்கள். மருத்துவ சிகிச்சைக்காக மகளோடு சென்று தங்கினார். பெங்களூருவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
“நந்தலாலாவின் உடல் நலம் குறித்து அவ்வப்போது விசாரித்து வந்தார் அவரது பேச்சின் ரசிகரான திமுக துணைப் பொதுச் செயலாளரான ஆ.ராசா எம்.பி. ஓரிரு வாரங்களுக்கு முன்பு கூட நந்தலாலாவிடம் பேசினார் ஆ.ராசா. மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவு பற்றி அக்கறையோடு விசாரித்தார். அப்போதே 5 லட்சம் ரூபாயை பெங்களூருவில் உள்ள தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக நந்தலாலாவிடம் வழங்கச் செய்தார் ஆ.ராசா. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான், இன்று எதிர்பாராத விதமாக காலமாகிவிட்டார் நந்தலாலா” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.