தனியார் கல்லூரி விடுதி உணவில் புழுக்கள் – 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Worms in food at Coimbatore private college hostel

கோவை தனியார் கல்லூரி விடுதியில் நேற்று இரவு வழங்கிய உணவில் புழுக்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில் 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தற்போது 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கே.ஜி சாவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, மதுக்கரை அருகே உள்ள திருமலையம்பாளையத்தில் நேரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2,000 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் வெளிமாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் மாணவ – மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

ADVERTISEMENT

சில நாட்களுக்கு முன்பு, விடுதியில் வழங்கப்பட்ட தேநீரிலும் பூச்சிகள் காணப்பட்டதாகவும், மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு உணவாக இட்லி தேங்காய் சட்னி, சாம்பார், வெள்ளை ரவை கேசரி வழங்கப்பட்டுள்ளது. இதில் கேசரியில் சிறிய புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சுகாதாரம் இல்லாத உணவை உட்கொண்டதால் வயிற்று வலிப்பதாக கூறி உள்ளனர்.

இதில் கல்லூரி மாணவர்களான தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அஜ்சல், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராவின், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், மயிலாடுதுறையைச் சேர்ந்த அரவிந்த், கடலூரைச் சேர்ந்த விக்ரம், ராஜபாளையத்தைச் சேர்ந்த பாலச்சந்தர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த தருண், தர்மபுரியைச் சேர்ந்த நிதிஷ்குமார், திருநெல்வேலி சேர்ந்த விஜய், விருதாச்சலத்தைச் சேர்ந்த தரண், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஃபாசில் ஆகிய மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மதுக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ADVERTISEMENT

அதில் ஏழு மாணவர்கள் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், தர்மபுரியைச் சேர்ந்த நிதீஷ்குமார், திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய் மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பேர் உள்ளிட்ட 5 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் விடுதி முன் சிறிது நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்று உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கே.ஜி சாவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share