ADVERTISEMENT

கர்நாடகா நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து ‘கை வரிசை’- திருச்சி ராம்ஜி நகரை முற்றுகையிட்ட பெங்களூர் போலீஸ்!

Published On:

| By Mathi

Trichy Ramji Nagar

கன்னட திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குநராகப் புகழ்பெற்ற ரவிகவுடாவின் காரில் இருந்து, அவரது புதிய திரைப்படமான ‘ஐ ஆம் காட்’ படத்தின் மிக முக்கியமான ஹார்டு டிஸ்க் மற்றும் கணிசமான ரொக்கப்பணம் திருடப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திருட்டு சம்பவத்தின் பின்னணியில், நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த பிரபல கொள்ளைக் கும்பலின் ‘கைவரிசை’ இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூரு காவல்துறையினர் அதிரடியாக தமிழ்நாட்டுக்கு விரைந்து, இக்கும்பலைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

விஜயநகர் பகுதியில் ரவிகவுடா தனது காரை நிறுத்தியிருந்த நிலையில், மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். காரில் இருந்த ரூ.75,000 ரொக்கத்துடன், ‘ஐ ஆம் காட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டு, தயாரிப்பாளரிடம் காண்பிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர். படம் வெளியீட்டிற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், முக்கிய ஹார்டு டிஸ்க் திருடப்பட்டது படக்குழுவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரவிகவுடா விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இந்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருவர் திருட்டில் ஈடுபட்டது தெளிவாகப் பதிவாகி இருந்தது. கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், திருட்டில் ஈடுபட்டவர்கள் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த பிரபல கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஜெயசீலன் மற்றும் அவரது மகன் என்பதும், அவர்கள் உடனடியாகத் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பெங்களூரு காவல்துறையினர் சிறப்புப் படை அமைத்து தமிழ்நாட்டிற்கு விரைந்தனர். தீவிர தேடுதலுக்குப் பின்னர், தலைமறைவாக இருந்த ஜெயசீலனை பெங்களூரு போலீசார் வெற்றிகரமாகக் கைது செய்தனர். எனினும், அவரது மகனைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

திருச்சி ராம்ஜி நகர் கும்பல்

திருச்சி ராம்ஜி நகர் கும்பல், கர்நாடகா, தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, ஹைதராபாத் உட்பட பல்வேறு மாநிலங்களில் சொகுசுக் கார்களின் கண்ணாடிகளை உடைத்து பணம், மடிக்கணினிகள், அலைபேசிகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடுவதில் கைதேர்ந்தவர்கள் ஆவர். இருண்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களைக் குறிவைத்து, கூர்மையான பொருட்களைக் கொண்டு கண்ணாடியை உடைத்து நொடிப்பொழுதில் பொருட்களைத் திருடி தப்பிச்செல்வது இவர்களின் பாணி.

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெங்களூரு இந்திராநகர் பகுதியில் நடைபெற்ற பல கார் கண்ணாடிகள் உடைப்பு மற்றும் லேப்டாப் திருட்டு சம்பவங்களிலும் இக்கும்பலைச் சேர்ந்த முரளி, செந்தில், மூர்த்தி, ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் செந்தில், முரளி, மூர்த்தி ஆகியோர் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூருவில் 19 ராம்ஜி நகர் கும்பல் உறுப்பினர்கள், மக்களை திசைதிருப்பி பணம் திருடியதுடன், கள்ள நோட்டுகளையும் புழக்கத்தில் விட்டதற்காக கைது செய்யப்பட்டனர். மேலும், 2015ஆம் ஆண்டு கன்னட இயக்குநர் எஸ். நாராயணனின் காரில் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் திருடப்பட்டது போன்ற பல்வேறு முக்கிய திருட்டுச் சம்பவங்களிலும் இக்கும்பலுக்குத் தொடர்பு இருந்துள்ளது. அண்மையில், ஆகஸ்ட் 2024இல் சென்னை அடையாரில் பேராசிரியர் நித்யா என்பவரின் காரில் இருந்து மடிக்கணினி திருடிய வழக்கில், ராம்ஜி நகரின் பிரபல திருடன் பிரதீப் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவர் மீது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் திருட்டு வழக்குகள் உள்ளன. (படம்: AI மூலம் உருவாக்கப்பட்டது)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share