திமுக அரசு 2021 இல் அமைந்ததில் இருந்து, தமிழ்நாடு தாண்டிய, இந்தியா தாண்டிய தமிழர்கள் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில்… ஜனவரி 11, 12 ஆம் தேதிகளை அயலக தமிழர் தினம் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த அடிப்படையில் நான்காவது வருடமாக “அயலகத் தமிழர் தினம்” இன்று ஜனவரி 11, நாளை ஜனவரி 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக “எத்திசையும் தமிழணங்கே” என திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வருட அயலக தமிழர் தின விழாவை இன்று (ஜனவரி 11) பகல் துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்கிறார்.
ஏற்கனவே இதுகுறித்த கலந்தாய்வுக் கூட்டம் டிசம்பர் மாதமே சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தலைமையில் நடைபெற்றது. அதற்கும் முன்பே பல ஆய்வுக் கூட்டங்களும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் மாதக் கணக்கில் நடந்து வந்தன.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால்… தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வழங்கும் வேர்களைத் தேடி திட்டம். இதன்படி… பல்லாண்டுகளுக்கு முன் அயல் நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் வம்சாவளியினரை மீண்டும் தமிழ்நாட்டின் பாரம்பரிய வேர்களோடு இணைப்பதற்காக, வேர்களைத் தேடி என்கின்ற பண்பாட்டு பயணத்தை கடந்த இரு வாரங்களாக மேற்கொண்டது அயலகத் தமிழர் நலத்துறை.

குமரியில் தொடங்கி கும்பகோணம் வரை தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய, வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களுக்கும், கோயில்களுக்கும் இம்மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தமிழர்களை அழைத்துச் சென்று வரலாற்று, பண்பாட்டு சுற்றுலாவாக நடத்தினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர்களின் தரப்பில் இதற்கு சிறப்பான ஒத்துழைப்பும் அளிக்கப்பட்டது. இந்த பண்பாட்டுப் பயணம் முடித்து, மிக நிறைவான மனதோடு இன்றும் நாளையும் அயலகத் தமிழர் விழாவில் பங்கேற்கிறார்கள் புலம் பெயர் தமிழர்கள்.

இந்த வருடத்தின் சிறப்பாக… 2025 அயலகத் தமிழர் தின விழாவில் கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தொழில்முனைவு, வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், மருத்துவ சுற்றுலா, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், வெளிநாட்டில் தமிழ்மொழி கற்பிப்பது மற்றும் அயல்நாடுகளில் தமிழ் ஊடகம் போன்ற தலைப்புகளின் அமர்வுகள் அமைச்சர்கள் மற்றும் மதிப்பிற்குரிய அயலகத் தமிழர்கள் முன்னிலையில் நடத்தப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்காக பிரத்யேகமாக மின்வாகன தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதி சார்ந்த தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங் ( Quantum Computing), உயிரி தொழில்நுட்பம் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றி அங்குள்ள தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் விரிவாக ஆய்வுக் கூட்டங்களில் உரையாற்றினர்.
அதன் அடிப்படையில் இரு நாள் நிகழ்வின் போது பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்த (Reverse Buyer-Seller Meet RBSM) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் FaMe TN முகமை மற்றும் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புடன் (FIEO) இணைந்து நடத்தப்படுகிறது. இது உலகளாவிய வாங்குபவர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுடன் தமிழக தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, இறக்குமதி ஒப்பந்தங்களை ஊக்குவித்து, நீடித்த மற்றும் நிலையான வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக மாற வழிவகுக்கும் என்கிறார்கள் துறை அதிகாரிகள்.
அயலக நாடுகளில் தமிழ் வழிக் கல்வி தொடர்பான கண்காட்சியும், புலம்பெயர் தமிழர்களின் தொழில் முயற்சியும் வளர்ச்சி என்பது பற்றிய கருத்தரங்கும் இன்று நடக்கின்றன.
மேலும் தமிழை உலகுக்கும், உலகைத் தமிழுக்கும் என்ற தலைப்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மாலை அமர்வில் பேசுகிறார். தமிழும், இந்தோ ஐரோப்பிய மொழிகளும் என்ற தலைப்பில் ஆய்வரங்கமும் நடக்கிறது.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் விதமாக, 8 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அவற்றில் கனியன் பூங்குன்றனார் விருதுகள் (வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள், கல்வி, சமூக மேம்பாடு மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் பங்களிப்புகளுக்கானது), மேலும், முதல் முறையாக, அயலகச்சூழலில் தலைசிறந்து விளங்கும் தமிழருக்கு ‘தமிழ் மாமணி’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அயலகத் தமிழர் நலத்துறையின் ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் பங்கேற்பாளர்கள் ‘பண்பாட்டுத் தூதுவர்’ என்று சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து ‘சிறந்த பண்பாட்டுத் தூதுவர்’ என்று விருதளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை, முதல்வர் ஸ்டாலின் அயலகத் தமிழர் தின விழாவில் கலந்துகொள்கிறார்.
–வேந்தன்
ஈரோடு கிழக்கு : விலகிய காங்கிரஸ்… திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்