சத்குரு
நீங்கள் ரிட்டைர்ட் ஆகிவிட்டால் “அடுத்து என்ன செய்வது?” என்ற குழப்பமும் ஒரு வெறுமையும் இருந்த வண்ணம் இருக்கும். ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையையே அடுத்து வரும் நாட்களில் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இதற்கு சத்குரு என்ன விளக்கம் தருகிறார் என்று பார்ப்போம்…
பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை பற்றிய புத்திசாலித்தனம் வரும் முன்பே வாழ்க்கை முடிந்து விடுகிறது. அவர்கள் பெறும் அனுபவம் அவர்களை புத்திசாலிகளாக்குவதற்கு பதில் காயப்படுத்தி விடுகிறது. ஆனால், நிறைய அனுபவங்கள் கொண்டவர்கள் தங்கள் அனுபவங்களை அறிவாக்கி அந்த அறிவை உலகுக்குப் பலவிதங்களில் பயன்படுமாறு செய்யக்கூடும். எனவே, பணி ஓய்வுக்குப் பிறகான உங்கள் வாழ்வை, பயன்மிக்கதாய் ஆக்க விரும்புகிறேன். பல்வேறு நிலைகளில் மனிதர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள்.

பணி ஓய்வு என ஒன்று தனியாக இல்லை எனினும், உங்கள் உடல் ஒருவகையில் செயல்திறன் குறைவுக்கு ஆளாகியிருக்கிறது. எனவே, உங்கள் வேலையை குறைத்துக் கொண்டே வருகிறீர்கள். அதற்குமேல் உங்களை நீங்கள் வருத்திக் கொண்டால் உங்கள் உடல் வேறுவிதமான “ஓய்வை” விரைவில் எட்டும். அதனால், ஓய்வு தேவைப்படுகிறது. ஆனால், ஓய்வு பெறும் பலருக்கும், “பணி ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது” என்கிற குழப்பம் ஏற்படுகிறது. ஓய்வுக்குப் பிறகுதான் உங்கள் கவனம், பொருளாதாரம், குடும்பம் போன்றவற்றிலிருந்து ஆன்மீகம் நோக்கித் திரும்ப வேண்டும்.உடலுக்கென்றோர் இறப்புத் தேதி உண்டு. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு உங்களை நீங்கள் எவ்வளவுதான் நன்றாகப் பார்த்துக் கொண்டாலும் உங்கள் உடல் பலவீனமாகிறது.
உடலைப் பொறுத்தவரை நாளையே அதன் தன்மை முழுவதும் மாறிவிடலாம். அது உங்களுக்கு நேராதென்று நம்புவோம். ஆனால், அதற்கான வாய்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. இலட்சக்கணக்கானவர்களுக்கு அது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. “இது எனக்கு நிகழாது” என நினைப்பவர்கள் முட்டாளின் சொர்க்கத்தில் வசிக்கிறார்கள். ஆனால், அது நிகழ்வதற்கான வாய்ப்பிருப்பதை உணர்ந்து சரியானதை செய்வதுதான் புத்திசாலித்தனம்.ஸ்தூல உடல் என்ற தன்மையைத் தாண்டிய இன்னோர் அம்சத்தைத் தூண்டிவிட வேண்டும். அதுதான் உங்களின் ஆன்மீகத்தன்மை. உடலை மட்டுமே தெரிந்தவருக்கு முதுமை என்பது மாபெரும் துயரமும் அச்சமும் தருவதாகவே இருக்கும்.

உடல் நலனுக்கு அச்சுறுத்தலோ கேடோ நோயோ வந்துவிட்டால் வாழ்வில் எல்லாமே அர்த்தமற்றதாகவும் பாரமாகவும் மாறிவிடுகிறது. ஆனால், உடல் என்ற எல்லையைக் கடந்து எதையேனும் நீங்கள் உணர்ந்திருந்தால், முதுமை என்பது ஒரு சிக்கலாக இருக்காது, வரமாகத்தான் இருக்கும். எனவே, பணிஒய்வுக்குப் பிறகான வாழ்வை ஒரு வரமாக மாற்றுவது, உங்கள் கைகளில்தான் இருக்கிறது. வாழ்வில் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகாவது, உங்கள் சக்தியின் குறிப்பிட்ட பகுதியை இந்தத் திசையில் கொண்டு செலுத்த வேண்டும்.
உங்கள் முழு வாழ்வையும் சக்தியையும் ஆன்மீகத்திற்கு அர்ப்பணிக்க முடிந்தால் அது மிகவும் அற்புதமானது. அதற்குரிய வாய்ப்பில்லையென்றால் சிறிதளவேனும் அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.நியாயமாக இந்த வாழ்வின் முதல் நாளிலிருந்தே அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் பிறந்த முதல் நாளிலிருந்தே இறப்புத் தேதிக்கான நினைவூட்டல்கள் தொடங்கி விடுகின்றன. வாழ்வை சரியாக கவனித்துப் பார்ப்பவர்களுக்கு அது புரியும். ஒருவேளை நீங்கள் வாழ்வை அவ்வளவு நுட்பமாக கவனிக்கவில்லையென்றால், ஐம்பது வயதிலிருந்தே போதுமான நினைவூட்டல்கள் வரத் தொடங்கி விடுகின்றன. உடம்பு பலகீனமாக ஆக, இந்த நினைவூட்டல்களை கவனத்தில் கொண்டு, ஸ்தூல எல்லையைத் தாண்டியுள்ள வாய்ப்புகளை உணராவிட்டால், உங்கள் வாழ்க்கை மிகவும் முட்டாள்தனமாகிவிடும்.

உயிர்ப்புமிக்க பணியில் நீங்கள் ஈடுபடுவீர்களென்றால் முதுமையை நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள். மரணம் வரும் நொடியில், மலர்ந்த சிரிப்புடன் விடை பெறுவீர்கள். அது ஓர் இழப்பாக உங்களுக்குத் தோன்றாது. ஏனெனில், அது ஓர் இழப்பே கிடையாது. வாழ்க்கை நிகழ்கிறதென்றால் மரணம் நிகழ்வதும் இயல்பானது. அது குறித்த அச்சம், அறியாமையாலும், விழிப்புணர்வின்மையாலும் வருகிறது. உண்மையுடன் தொடர்பிலில்லாமல் உங்கள் உடலுடன் உங்களை ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டு விட்டீர்கள். ஏனெனில், வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை நீங்கள் கண்டுணரவில்லை.
மற்றவர்கள் உங்களுக்கு என்ன போதனைகளைக் கொடுத்தாலும், நீங்கள் ஆத்மா தான் என்றாலும் உங்கள் அனுபவம் உடல் சார்ந்ததுதான். எனவே அதை இழப்பது குறித்த அச்சம் இயல்பானது. மற்ற பரிமாணங்களையும் உணர்ந்து அதில் உங்களை நிலைநிறுத்திக் கொண்டால், உடலென்பது அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது. அதைக் கையாள்வது மிகவும் எளிதாகிவிடும். வாழ்வோ மரணமோ பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்வை ஒரு வரமாக மாற்றிக் கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
மீன்டும் சனிக்கிழமை சந்திப்போம்….
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரோடு கிழக்கு : விலகிய காங்கிரஸ்… திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்
கிச்சன் கீர்த்தனா : சால்டட் கேரமல் பொங்கல்
ஒரே அசிங்கமா போச்சு… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் சிக்னல்… போலீஸ் ஸ்கெட்ச் ரெடி… சீமான் கைது?