கோவை மாவட்டம் அன்னூர் சொக்கம்பாளையம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கல்லால் தாக்கியதில் சகுந்தலா என்ற பெண் பலியானார். இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான பெண் சகுந்தலா. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்து வரும் நிலையில் இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
சகுந்தலா கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று சொக்கம்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த ரஞ்சித்குமார் திடீரென தெரு நாயை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தார். நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை கண்டித்த பொழுது, கையில் இருந்த கத்தியால் பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் சொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேலுமணி, கவிதா , கார்த்திகா மற்றும் சின்னச்சாமி ஆகியோ காயமடைந்தனர். இதனையடுத்து ஆவேசத்துடன் சுற்றித்திரிந்த அவர், வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சகுந்தலாவை தாக்கி கீழே தள்ளி உள்ளார்.
அப்பகுதியில் கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் தலையில் தாக்கினார். இதனால் சகுந்தலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரஞ்சித்தை பிடித்து அடித்து கட்டி போட்டனர்.
பின்னர் அன்னூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்றனர்.
கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். உயிரிழந்த சகுந்தலாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ரஞ்சித் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை, சிகிச்சைக்காக மனநல காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.