உலகின் மிக முதன்மையான நகரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாநகருக்கு இன்று வயது 386.
386 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் இன்றைய சென்னையின் நிர்வாகத் தலைவராக இருந்தவர் வேங்கடநபதி நாயக். இவரது தந்தை சென்னப்ப நாயக்கர். சென்னையின் வடக்கில் பழவேற்காடு தொடங்கி இன்றைய சாந்தோம் வரை கடற்கரை பகுதிகள் முழுவதையும் சென்னப்ப நாயக்கர் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.
இதன் ஒரு பகுதியான கூவம் நதி, வங்க கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியை கி.பி.1639-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது. இன்றைக்கு சென்னையின் கம்பீர அடையாளமாக இருக்கும் தலைமை செயலக கோட்டை இருக்கும் இடம்தான் அன்று கிழக்கிந்திய கம்பெனி வாங்கிய கழிமுகப் பகுதி. (அன்றைய நாள்தான் சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.)
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கோட்டையும் அதன் சுற்றிய பகுதிகளும் சென்னப்பட்ட நாயக்கரின் நினைவாக சென்னப்பட்டணம் என பெயரிடப்பட்டது. அதே கால கட்டத்தில் மதசாரப்பட்டணம் என்ற இடமும் இருந்தது.
இப்படித்தான் இந்த மாநகருக்கு சென்னை என்றும் மதராஸ்- மெட்ராஸ் என்றும் பெயர்கள் வந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் மதராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. அன்றைய மதராஸ் மாகாணம் இன்றைய ஒடிஷாவின் கோரபுட் மாவட்டம் வரை நீண்டு பரவி இருந்தது. நாடு, மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட போது மதராஸ் மாகாணத்தின் பகுதிகள் இணைக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடகா என மாநிலங்கள் உருவாகின. எஞ்சிய மதராஸ் மாகாணப் பகுதிகளுக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டியவர் தமிழ்நாடு முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா. 1996 வரை சென்னை, மதராஸ், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. 1996-ல் கலைஞர் முதல்வராக பதவி வகித்த போது, ‘சென்னை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில் சென்னைக்கு தனித்துவமான முதன்மையான இடம் இன்றைக்கும் உண்டு.
இந்த சென்னை மாநகருக்கு இன்று 386 வயது.
386-வது பிறந்த நாள் காணும் சென்னை மாநகருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து,
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து,
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,
மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
