தீபாவளிக்கு முன்னதாக, ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் 79வது சுதந்திர தினமான கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அரசாங்கம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளது. இது சாதாரண மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்கும். இது உங்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
அதன்படி நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி சமீபத்தில் 5%, 18%, மற்றும் 40% என மூன்று அடுக்குகளாக குறைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ள நிலையில் அடுத்த பரிசை வழங்க மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது பெரும்பாலும் 2025 தீபாவளிக்கு முன்னதாக EPFO 3.0 டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்மூலம் 8 கோடி இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு அதிக செலவழிப்பு வசதிகளை வழங்கப்பட உள்ளது.
மேலும், ‘இபிஎஃப்ஓ 3.0’ மூலம் பணத்தை எடுப்பது எளிதாவதோடு, தகவல்களைப் புதுப்பித்தல் மற்றும் உரிமைகோரல்களைச் செய்தல் போன்ற செயல்முறைகளை விரைவுபடுத்த முடியும். ஊழியர்கள் தங்கள் யுஏஎன்-ஐச் செயல்படுத்துவதன் மூலம் மற்றும் தங்கள் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஏடிஎம்களிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
இந்த புதிய முறையில், இபிஎஃப்ஓ அதன் சந்தாதாரர்களுக்கு ஒரு சிறப்பு ஏடிஎம் அட்டையை வழங்கப்படும். பிஎஃப் கணக்குடன் இணைக்கப்படும் இந்த அட்டையைப் பயன்படுத்தி, சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை நேரடியாக ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து எடுக்க முடியும். யுபிஐ மூலம் பணத்தை எடுக்க, உங்கள் பிஎஃப் கணக்கை யுபிஐ உடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, சந்தாதாரர்கள் பிஎஃப் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.