ஆஸ்கர் 2026 விருதுக்கான அகாடமி வாக்களிப்பில் பங்கேற்க இந்திய நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் உட்பட 534 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். with kamalhaasan who are in Academy for Oscar voting
உலகளவில் ஆஸ்கர் விருது என்பது திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய கெளரவமாக கருதப்படுகிறது. அதனை கையில் ஏந்துவதே பலரின் கனவாக உள்ளது.
அதன்படி 2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 15ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வழங்கப்பட உள்ளது. இதனை கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்க உள்ளார்.
விருதுக்கான பரிந்துரை மற்றும் வாக்களிப்பு அடுத்தாண்டு ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை நடைபெறும். பரிசீலனைக்குப் பிறகு, பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் ஜனவரி 22 அன்று அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா என உலகம் முழுவதிலுமிருந்து 534 பேர் அகாடமியில் சேர அழைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் அனைவரும் ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 534 புதிய உறுப்பினர்களில் 41 சதவீத பெண்கள் மற்றும் 45 சதவீத ஆண்கள் உள்ளனர்.
ஏற்கெனவே அகாடமியின் உறுப்பினர் எண்ணிக்கை 10,500 க்கும் அதிகமாக உள்ளது. தற்போது புதிய உறுப்பினர்களின் வருகை மூலம் அந்த எண்ணிக்கை 11,000 ஐத் தாண்டும்.
கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குர்ரானாவைத் தவிர, திரைப்பட தயாரிப்பாளர் பயல் கபாடியா, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா, ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ் மற்றும் காஸ்டிங் இயக்குனர் ரணபீர் தாஸ் ஆகியோர் இந்த ஆண்டு பட்டியலில் இந்தியாவிலிருந்து மற்ற ஆஸ்கர் உறுப்பினர்களாக தகுதி பெற்றனர்.
உலகளவில் கில்லியன் ஆண்டர்சன், அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜெர்மி ஸ்ட்ராங் மற்றும் ஜேசன் மோமோவா போன்றோர் அடங்குவர்.
இதுதொடர்பாக அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் அகாடமி தலைவர் ஜேனட் யாங் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மதிப்புமிக்க கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை அகாடமியில் சேர அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். திரைப்படத் தயாரிப்பு மற்றும் பெரிய திரைப்படத் துறைக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மூலம், இந்த விதிவிலக்கான திறமையான நபர்கள் நமது உலகளாவிய திரைப்படத் தயாரிப்பு சமூகத்திற்கு அழியாத பங்களிப்புகளைச் செய்துள்ளனர் என பாராட்டியுள்ளது.