நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுக்கு 3 முறை நாடாளுமன்ற கூட்டத்ததொடர் கூடும். பிப்ரவரி மாதம் ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். பட்ஜெட்டுக்கு பின் அதுகுறித்த விவாதங்கள் நடைபெறும்
பின்னர் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் இடையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும். இந்த ஆண்டும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பதிவில், “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரை நடத்த அனுமதி வழங்கி உள்ளார். இதன்படி குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் விருப்பங்களுக்கு ஊக்கமளிக்கும் ஆக்கப்பூர்வமான அதே நேரத்தில் அர்த்தமுள்ள அமர்வை எதிர்நோக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதனால் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், திமுக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காரசார விவாதங்களை முன் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
