ADVERTISEMENT

கொடி பறக்கிறது.. பிள்ளையார் சுழி போடப்பட்டது என்றார் எடப்பாடி – என்னாச்சு? – செங்கோட்டையன் அட்வைஸ்

Published On:

| By Pandeeswari Gurusamy

Sengottaiyan's advice to Edappadi Palaniswami

ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்தால் இது போன்ற நிலை தான் ஏற்படும் என எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்ட 14 பேர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (நவம்பர் 7) கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ” நமக்காக உதவி செய்தவர்களை எல்லாம் மறந்து, புதிதாக வேறு கட்சியிலிருந்து வருபவர்கள், பணம் செலவு செய்தால் போதும் என நினைத்து அவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதற்கு அனுமதியை வழங்கியவர் யார்? என்பதையெல்லாம் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆவதற்கு வழிவகை செய்தவர் அன்றைய பொதுச் செயலாளர் சசிகலா. ஆனால் அவரைப் பற்றி கொச்சையாக பேசினார். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல பேசக்கூடாது என்பதுதான் அரசியல் நாகரீகம் என்று நான் அவரிடம் சொன்னேன்.

ADVERTISEMENT

18 பேர் தேவைப்பட்டபோது, டிடிவி தினகரனின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியாக இருந்ததால் 122 பேருடன் சட்டப்பேரவை தலைவர் முன்பு ஒரு மனதாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக கொண்டு வரும் பணிகள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் 18 பேரும், கழகத்தில் இருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். அதற்குப் பிறகு ஆட்சி நடத்துவதற்கு தடுமாறிக் கொண்டிருந்தபோது தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓபிஎஸ்சை அழைத்து வந்து, 11 பேரும் ஆதரவு தர வேண்டும். நீங்கள் ஒருங்கிணைப்பாளர்.. நான் இணை ஒருங்கிணைப்பாளர். நான் முதலமைச்சர்.. நீங்கள் துணை முதலமைச்சர் என்று சொல்லி அவரையும் இந்த நிலைக்கு கொண்டு சென்று காலம் கடந்த பிறகு அவரையும் வெளியேற்றினார்.

ADVERTISEMENT

நான்காண்டு காலம் ஆட்சி கட்டிலில் அமர வைத்து நம்மை பாதுகாத்த பாரதிய ஜனதா கட்சிக்கு 2024 ஆம் ஆண்டு மோடியை பிரதமராக கொண்டு வர வேண்டும் என்ற நேரத்தில் வாபஸ் பெற்றார். அது மட்டும் இல்லாமல், இனிமேல் பாரதிய ஜனதா கட்சியோடு 2024, 26, 29, 31லும் கூட்டணி இல்லை என்றார். இப்படி கடந்த காலத்தைப் பற்றி நிறைய சொல்லலாம். அதில் சிலவற்றை மட்டும் சொன்னேன்.

மேலும் கட்சியில் இருக்கும் முக்கிய பொறுப்பாளர்கள், இந்த இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற நிர்வாகிகளுக்கு இருக்கக்கூடிய இடர்பாடுகள் என்னவென்றால் 45 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே பூத் கமிட்டிக்கான குழுவில் இருக்க முடியும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பல நிர்வாகிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது.

தன்னைச் சுற்றி இருப்பவர்களை பலவீனப்படுத்துவதன் மூலம் அவர்களே பலவீனம் அடைவார்கள் என்பதுதான் வரலாறு.

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி பறக்கிறது.. பிள்ளையார் சுழி போடப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். ஆனால் நேற்று முன்தினம் இதற்கு வாய்ப்பு இல்லாமல் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை அறிவீர்கள்.

இப்படி நாம் ஒற்றுமை உணர்வோடு இணையும் போது மற்றவர்கள் நம்மை நாடி வருவார்கள் இதுதான் வரலாறு. இதுதான் அதிமுக வரலாறு இந்த வரலாற்றை தான் ஜெயலலிதாவும், எம்ஜிஆர்-ம் படைத்தனர்

ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் கால்களில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்தால் இது போன்ற நிலை தான் ஏற்படும்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share