ADVERTISEMENT

வெள்ளை சட்டை அணிபவர்களுக்குத்தான் மரியாதை கொடுப்பீர்களா? போலீஸுக்கு ஐகோர்ட்டு கேள்வி!

Published On:

| By Kavi

வெள்ளை சட்டை அணிந்து வந்தால் தான் மரியாதை தருவீர்களா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Will you only respect those who wear white shirts

சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நல சங்க நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. 

ADVERTISEMENT

இந்த புகாரை அளித்த ஒரு குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்தும் வகையில் மற்றொரு குடியிருப்பு உரிமையாளர் வாட்ஸ் அப் குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக அளித்த புகார் மீது நொளம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராகியிருந்தார்.

இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜூன் 23) விசாரணைக்கு வந்தபோது , காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து நீதிபதி வேல்முருகன், “மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?.

காவல் ஆய்வாளர் முன்பு அமர்வதற்கு புகார்தாரருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெள்ளை சட்டையுடன் வந்தால்தான் மரியாதை கொடுப்பீர்களா? சிவப்பு கம்பள வரவேற்பு தருவீர்களா?

அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்கமாட்டீர்களா? அழுக்கு சட்டையுடன் வாக்களித்தால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?

மக்கள் வரிப்பணத்தில் தானே சம்பளம் வாங்குகிறீர்கள்? நீங்கள் சொல்கிறவர்கள் தான் இருக்கையில் அமர வேண்டுமா? அரசு அலுவலகம் அனைவருக்குமானது” என்று போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் காவல்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். Will you only respect those who wear white shirts

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share