பூனம் முத்ரேஜா, மார்த்தாண்ட் கெளஷிக்
வரதட்சணை தொடர்பான கொடூரத்தால் தினமும் சுமார் 16 பெண்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். கொலைகளைத் தவிர, இந்தக் கோரிக்கைகளால் தொடர்ந்து துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பெண்களின் துயரங்களுக்குக் கணக்கே இல்லை.
2025, ஆகஸ்ட் 21 அன்று, கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண் நிக்கி பாட்டி, ரூ. 36 லட்சம் வரதட்சணைக் கோரிக்கையை நிறைவேற்றாததால், அவரது கணவராலும் மாமனார்-மாமியாராலும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது திருமணத்தின்போது மணமகன் குடும்பத்தின் கோரிக்கைகளை ஏற்கெனவே நிறைவேற்றத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இருப்பினும், கோரிக்கைகள் தொடர்ந்தன. நிக்கியின் நான்கு வயது மகன் இந்தத் தாக்குதலைக் கண்கூடாகக் கண்டான். நிக்கி தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைக் கைது செய்துள்ளனர்.

எதிர்ப்பு பெருகி வரும்போதிலும், இதில் உள்ள ஆழமான செய்தி என்னவென்றால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் நீதியின் நிலை குழப்பமானதாக உள்ளது. இதில் முரண்பட்ட வாக்குமூலங்கள், சிசிடிவி குறித்த கூற்றுகள், மாற்று விளக்கங்கள் (சிலிண்டர் வெடிப்பு கோட்பாடு), முரண்பட்ட ஆதாரங்கள் ஆகிய பிரச்சினைகள் உள்ளன. நமது அமைப்பில் தண்டனைகள் அரிதானதாகவும் தாமதங்கள் நீண்டதாகவும் உள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை எவ்வாறு சாதாரணமாக, பரவலாக, ஆனால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது என்பதைக் காட்டும் ஆயிரக்கணக்கான சம்பவங்களில் நிக்கியின் கொலையும் ஒன்றாகும். சமீபத்திய NCRB தரவுகள் 2023இல் வரதட்சணை தொடர்பான இறப்புகள் 14% அதிகரித்துள்ளதை வெளிப்படுத்தின. தினமும் சுமார் 16 பெண்கள் வரதட்சணை தொடர்பான கொடூரத்தால் தங்கள் உயிரை இழக்கின்றனர்.
கொலைகள் ஒருபுறம் இருக்க, வரதட்சணை சார்ந்த கோரிக்கைகளால் தொடர்ந்து துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பெண்களின் துயரங்களுக்குக் கணக்கே இல்லை.
வரதட்சணை என்பது பரந்த வன்முறைகளின் பல முகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. உடல்ரீதியான, பாலியல், உணர்ச்சிப்பூர்வமான, நிதி ரீதியான துன்புறுத்தல்களும் இதில் அடங்கும். உடல்ரீதியான தாக்குதல் வெளிப்படையாகத் தெரிந்தாலும் திருமண உறவுக்குள் நடக்கும் வலுக்கட்டாயமான பாலுறவு உள்ளிட்ட பாலியல் வன்முறைகள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை.
பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS, 2023), “ஒரு ஆண் தனது பதினெட்டு வயதுக்குக் குறையாத மனைவியுடன் மேற்கொள்ளும் பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயல்கள் வல்லுறவாகக் கருதப்படாது” என்கிறது.
உணர்ச்சிப்பூர்வமான வன்முறை – இழிவுபடுத்துதல், அச்சுறுத்தல்கள் அல்லது தனிமைப்படுத்துதல் – வழக்கமானதாகக் கருதப்படுகிறது. வேலை மறுப்பு, சொத்துக்களைக் கட்டுப்படுத்துதல், கட்டாயமாகச் சார்ந்திருக்க வைத்திருப்பதன் மூலம் நிதி ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவை மணமான பெண்கள் மீதான வன்முறைகளாக இருக்கின்றன.

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி (2019-21), 18-49 வயதுடைய திருமணமான பெண்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் கணவரால் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 14% பேர் உணர்ச்சிப்பூர்வமான வன்முறையையும், 6% பேர் பாலியல் வன்முறையையும் அனுபவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், திருமணமான பெண்களில் 47% பேரும், திருமணமான ஆண்களில் 43% பேரும், ஒரு கணவர் சில சூழ்நிலைகளில் தனது மனைவியை அடிப்பது நியாயமானது என்று நம்புகிறார்கள். எதிர்த்து வாதிடுவது, அனுமதி இல்லாமல் வெளியே செல்வது, வீட்டு வேலைகளைப் புறக்கணிப்பது ஆகியவை மனைவியை அடிப்பதற்கான நியாயமான காரணங்களாகக் கருதப்படுகின்றன.
வன்முறையைப் புகாரளிப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன. பல சமயங்களில் பெண்களைத் துன்புறுத்துபவர் கணவர் அல்லது மாமனார்-மாமியார். இவர்களையே நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சார்ந்திருப்பதால் அவர்களைக் குற்றம் சாட்டுவது பிரச்சினைக்குரியதாக மாறுகிறது. புகுந்த வீட்டை இழப்பது, குழந்தைகளின் பாதுகாப்பு, சமூகத்தில் தங்கள் நிலையை இழப்பது போன்ற அபாயங்கள் இதில் உள்ளன.

காவல்துறையின் அலட்சியமும் நீதிமன்றத் தாமதங்களும் நிலைமையை மோசமாக்குகின்றன: 2017, 2022க்கு இடையில், கணவர் அல்லது உறவினர்களால் ஏற்படும் கொடுமைக்கான இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498Aஇன் கீழ் பெங்களூரில் 1% மட்டுமே தண்டனைகள் வழங்கப்பட்டன. விளிம்பு நிலையில் உள்ள பெண்கள், குறிப்பாக கிராமப்புறங்களில், தங்குமிடம், போக்குவரத்து அல்லது சட்ட உதவியைப் பெறுவது மிகவும் கடினம். இதுவும் நீதியைப் பெற முடியாத நிலையை உருவாக்குகிறது.
வீடுகளைத் தாண்டி, பொது இடங்களும் டிஜிட்டல் இடங்களும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளன. தில்லி, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் போன்ற முக்கிய நகரங்களில் பயணத்தின்போது அல்லது பணிபுரியும்போது பத்தில் நான்கு பெண்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆன்லைனில் பெண்கள் புதிய ஆயுதங்களால் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்கின்றனர். ஆன்லைனில் தொடர்ந்து சிலர் செய்திகளை அனுப்பித் தொந்தரவு செய்வது, போலி படங்களை உருவாக்குவது, அவற்றை வைத்து பிளாக்மெயில் செய்வது ஆகியவை நடக்கின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு பெண்ணின் நற்பெயரையும் மன ஆரோக்கியத்தையும் அழிக்க முடியும். AI மூலம் உருவாக்கப்படும் நிர்வாணப் படங்கள் சமூக ஊடகங்களில் பரவுவது, தொழில்நுட்பத்தின் அபாயகரமான போக்கைக் காட்டுகிறது. இதுவே பல பெண்களை ஆன்லைனில் இருந்து விலகச் செய்கிறது.
இதைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் கருத முடியாது. வன்முறை என்பதைச் சமூக நோயாக மட்டுமல்லாமல், சுகாதார நெருக்கடியாகவும் அங்கீகரிக்க வேண்டும். வன்முறையானது காயங்கள், தேவையற்ற கர்ப்பங்கள், பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள், மனச்சோர்வு, பதற்றம் எனப் பல விதமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக ஆஷா, ஏஎன்எம் (ASHA – அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்; ANM – துணை செவிலியர் மருத்துவச்சி) ஆகிய அமைப்புகளின் ஊழியர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் முதலில் தொடர்புகொள்பவர்கள். ஆனால் பாலியல் அடிப்படையிலான வன்முறையைக் கண்டறியவோ அவற்றைக் கையாளவோ இவர்களில் சிலர் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளனர்.
மருத்துவமனைகளும் முதன்மை சுகாதார மையங்களும் துஷ்பிரயோகத்தை உணர்வுப்பூர்வமாகச் சோதிக்கவும், காயங்களைப் பதிவு செய்யவும், ரகசியமாக ஆலோசனைகளை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களைச் சட்ட, சமூக ஆதரவு சேவைகளுடன் இணைக்கவும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தை பெண்களால் மட்டுமே நடத்த முடியாது. ஆண்களும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆண்களின் கண்ணோட்டங்களை மாற்றுவது அவசியம். இதற்காக, இந்திய மக்கள் தொகை அறக்கட்டளை (Population Foundation of India) “தேசம் மாறும் போது ஆணும் மாறுவான்” (Desh Badlega Jab Mard Badlega) போன்ற பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், வரதட்சணையை நிராகரிக்க வேண்டும், தங்களைச் சுற்றி நடக்கும் வன்முறைக்கும் பாகுபாடுகளுக்கும் எதிராக நிற்க வேண்டும். ஆண்களை வளர்க்கும் விதத்தை மாற்ற வேண்டும். சட்டங்களால் குற்றங்களின் மூல காரணங்களைக் களைய முடியாது.

நவம்பர் 25முதல் டிசம்பர் 10வரை இதற்கான பிரச்சாரம் நடந்துவருகிறது. இது வெறும் அடையாளப்பூர்வமானது அல்ல. பாலின அடிப்படையிலான வன்முறையை தேசிய முன்னுரிமையாகக் கருதுவதற்கான அழைப்பு. கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார அமைப்புகள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், குடிமக்கள் அனைவரும் இந்த மௌனத்தை முடிவுக்குக் கொண்டுவர இணைந்து பணியாற்ற வேண்டும்.
இந்த ஆண்டு, பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் ஒன்றிணையுமாறு இந்தப் பிரச்சாரம் அழைப்பு விடுக்கிறது. ஆன்லைன் தளங்களைப் பாதுகாப்பானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இந்தப் பிரச்சாரத்தின் மூலம் மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் வீட்டில், ஆன்லைனில், பணியிடத்தில், தெருவில் என எல்லா இடங்களிலும் பயமின்றி வாழும்வரை சமத்துவத்திற்கான இந்தியாவின் வாக்குறுதி நிறைவேறாது. நிக்கி போன்ற பெண்களுக்கு நீதி கிடைப்பது விதிவிலக்காக இருக்கக் கூடாது. அதுவே விதியாக மாற வேண்டும்.
பூனம் முத்ரேஜா, இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர்.
மார்த்தண்ட் கெளசிக், இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் ஊடகம் மற்றும் தகவல்தொடர்பு சார்ந்த மூத்த நிபுணர்.
நன்றி: தி வயர்
