ADVERTISEMENT

திருப்பூர்: வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி தற்கொலை- கணவர் உள்ளிட்ட 3 பேர் கைது

Published On:

| By Minnambalam Desk

Dowry Death Case

திருப்பூரில் திருமணம் நடந்து 11 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கணவர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் பிரெண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்ற பெண்ணுக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு 120 பவுன் நகை, 25 லட்சம் ரொக்க பணம் மற்றும் 38 லட்சம் மதிப்பிலான இன்னோவா கார் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

ADVERTISEMENT

திருமணத்திற்குப் பின் கணவர், சரியாக வேலைக்குச் செல்லாமல் வாடகையை மட்டும் வாங்கி குடும்பம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதேபோல சொந்த நிறுவனத்திற்கும் சரி வர செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு வாடகை என்ற வகையில் மாதம் சுமார் ஒன்றரை லட்சம் வருமானம் வந்ததாகக் கூறப்படும் நிலையில், மேலும் பணம் தேவை எனக் கூறி ப்ரீத்தி வரதட்சணையாகக் கொண்டு சென்ற 20 லட்சம் ரொக்கப் பணத்தையும் எடுத்து செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் ப்ரீத்தி இருந்து வந்தார்.

இதற்கிடையில் ப்ரீத்தி குடும்பத்தினரின் பூர்வீக சொத்து விற்ற வகையில் ரூபாய் 50 லட்சம் பங்கு தொகையும் ப்ரீத்திக்கு வந்துள்ளது. அதையும் கேட்டு கணவர் சதீஷ்வர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு வந்த ப்ரீத்தி அங்கேயே தங்கி இருந்தார். இந்நிலையில் கடும் மன உளைச்சலால் ப்ரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினர் ப்ரீத்தியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த தற்கொலை குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் ப்ரீத்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் சதீஷ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா என மூன்று பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ப்ரீத்தியின் கணவர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது உடலை வாங்க குடும்பத்தினர் முன் வந்துள்ளனர்.

திருப்பூரில் திருமணமாகி 77 நாட்களில் ரிதன்யா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது ப்ரீத்தி வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share