கரூரில் நடந்த துயர சம்பவத்தை தொடர்ந்து பாஜக தரப்பில் விஜய்யிடம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக என்.டி.ஏ கூட்டணியில் சேருமாறு டெல்லியில் இருந்து விஜய்யிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 4) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “விஜய் விஷயத்தில் ஏன் ஏன் என நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால் ஏன் என்று கேள்வி கேட்டாலே, முதல்வர் காதில் பஞ்சு வைத்துக்கொண்டு Mute Mode-க்கு போய்விடுகிறார். விஜய்க்கு இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரியும். தெரிந்தும் ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை.
மணிப்பூர் சம்பவம் வேறு, கரூர் சம்பவம் வேறு. மணிப்பூர் சம்பவத்துக்கு நானே தலைகுனிகின்றேன். ஆனால் அதை கரூரோடு ஒப்பிடுவது சரியல்ல. இப்படி ஒப்பிட்டு பேசினால் நிறைய விஷயங்களை பேச வேண்டியிருக்கும்.
கரூரில் இப்படி ஒரு துயரம் சம்பவம் நடந்திருக்கிறது என்றால் அவரே (முதல்வர்) முன்வந்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆனால் மாநில அரசு சிபிஐ வேண்டாம். எஸ்ஐடிதான் வேண்டும் என சொல்கிறதென்றால் எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்றார்.
’கரூர் துயரம் தொடர்பாக பாஜக சார்பில் விஜய்யிடம் பேசப்பட்டுள்ளது. 2026ல் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் என்.டி.ஏ கூட்டணிக்கு வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு,
“இதுபற்றி யார் சொல்லியிருக்கிறார்கள். அவரை வரவைப்பதும், வேண்டாம் என்பதும் இரண்டாவது. அரசியல் எனக்குதான் தெரியும் என்று கேமரா முன் பேசுபவர்களுக்காக பதில் சொல்வதன் மூலம் உங்களுக்கும் நேரம் வீண், எனக்கும் நேரம் வீண்” என்று பதிலளித்தார் குஷ்பு.
மேலும் அவர், ‘கரூரில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. எதிரியாக இருந்தாலும் மனது பதறிபோகும். அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. விஜய் ஏற்கனவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அங்கு போனால் என்ன நடக்கும் என்றும் எண்ணிபார்க்க வேண்டும். இதில் முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட பிறகே அதுபற்றி பேச வேண்டும்.
நீதிபதி சொன்னது தொடர்பாக விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். நான் அவர்களுடைய செய்தித்தொடர்பாளர் கிடையாது” என்று பதிலளித்தார்.
முன்னதாக பாஜகவும் – விஜய்யும் மறைமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே? என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளார்கள் கேட்டதற்கு, ‘இதெல்லாம் திமுகவின் சதி. மக்களின் நன்மதிப்பை திமுக இழந்துவிட்டது. 2026ல் திமுக டெபாசிட்டை கூட பெறாது’ என்று காட்டமாக கூறினார்.