கரூர் துயர சம்பவ வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் நியமித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில் 2 பெண் எஸ்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வெற்றிக் கழக கட்சியினருக்கு காட்டமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, கரூர் சம்பவத்தில் பாரபட்சமற்ற மற்றும் முழுமையான விசாரணையை நடத்துவதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) நியமித்தார்.
அதன்படி இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தவிர்த்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோரும் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இது தவிர அஸ்ரா கார்க், தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கருதும் எந்தவொரு பதவியின் கீழும் உள்ள கூடுதல் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளதாகவும், சிறப்பு விசாரணைக் குழுவின் திறம்பட செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பையும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதனையடுத்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து பதிவுகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு கரூர் காவல்நிலைய போலீசார் இன்று வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
