விஜய்க்கு பாதுகாப்பு உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிர்ச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்டத்தில் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.
இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தசூழலில் அக்கட்சியின் மதுரை மாவட்ட எக்ஸ் பக்கத்தில், “தலைவர் விஜய் உயிருக்கு அபாயம் இருப்பதாக சிஆர்பிஎப் தெரிவித்ததால், அவரது பாதுகாப்பு ‘Y’ பிரிவிலிருந்து ‘Z’ பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்காரணமாக விஜய்க்கு y+ அல்லது z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ‘புலனாய்வுத் துறை அறிக்கையின் படி விஜய்க்கு y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறியுள்ளது.
இதற்கிடையே தவெக மீதான வழக்குகள் தொடர்பாக விஜய் அக்கட்சி மூத்த நிர்வாகிகளுடனும், சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.