திமுக கூட்டணியில் தவெக நீடிக்குமா? எதிர்பார்ப்பது என்ன? வேல்முருகன் பேட்டி- முழுமையாக!

Published On:

| By Mathi

Velmurugan TVK DMK Alliance

திமுக கூட்டணியில் இணைந்திருப்பது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியதாவது: ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஒரு இடத்தை திமுகவிடம் கோரியிருந்தோம். 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் எந்த இடங்களையும் தர திமுக முன்வரவில்லை. அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள், சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் உங்களுக்கான உரிய இடங்களைத் தருகிறோம் என்று சொன்னார்கள்.

ADVERTISEMENT

ஆனால் இப்போது உங்களுக்குத் தெரியும், சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டது, ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலும் வந்தது. நாங்கள் கடலூர் மேயர் கேட்டோம், துணை மேயர் கேட்டோம், பல ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிகள் இருந்தும் எங்களுக்காவது சில இடங்கள் வேண்டும் என்று கேட்டோம். சில நகர் மன்றத் தலைவர் பதவிகளைக் கேட்டோம், சில பேரூராட்சித் தலைவர் பதவிகளைக் கேட்டோம். எதுவுமே எங்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை.

இந்தச் சூழலில் தற்போது நடைபெற இருக்கின்ற இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குக் கூடுதல் இடங்கள் வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவிடம் முன்வைத்திருந்தோம். ஆனால் இந்த நிமிடம் வரையில் கூடுதல் இடங்களைத் தருகிறோம் என்கிற அந்தத் தகவல் திமுகவிடமிருந்து எங்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை.

ADVERTISEMENT

ஏற்கனவே நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டபோது, அந்தந்தக் கட்சிகள் போட்டியிட்ட அந்த இடங்களில்தான் போட்டியிட வேண்டும் என்றும், அந்த எண்ணிக்கையில்தான் தர திமுக முடிவு செய்திருக்கிறது என்றும், இன்னும் சொல்லப்போனால் பல கட்சிகளிடம் அவர்கள் கொடுத்த தொகுதியிலிருந்து இடங்களைக் குறைத்துக் கொள்ள நாங்கள் வேண்டுகோள் வைத்திருப்போம் என்கிற கருத்தை எங்களிடம் தெரிவித்திருந்தது.

அப்போது நாங்கள் சொன்னோம், நீங்கள் மீண்டும் பரிசீலனை செய்து எங்களுக்குக் கூடுதல் இடங்களைத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லியிருந்தோம்.

ADVERTISEMENT

கூடுதல் இடங்கள் கேட்ட அதே நேரத்தில், அதைவிட மேலானதாகத் தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளை 10 கோரிக்கைகளாக முன்வைத்து, இதை நிறைவேற்றித் தருவதைக் குறித்து எங்களுக்கு உரிய பதில் வேண்டும் என்று கேட்டிருந்தோம். அந்த 10 கோரிக்கைகளையும் நான் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது நான் உங்களிடத்தில் படித்துக் காண்பித்தேன். அது குறித்து எந்த அறிவிப்புகளும் இதுவரையில் எங்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை.

ஆக இந்தச் சூழலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினுடைய இந்த அரசியல் தலைமைக்குழு ஒன்றுகூடி, கூடுதல் இடங்களைத் தரவில்லை, தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுரிமைச் சிக்கல்கள், உலகத் தமிழர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க நாம் வைத்த கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படாத ஒரு சூழ்நிலையை திமுக எடுக்கும் என்று சொன்னால், திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியில் தொடர்வதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக, இந்தக் கோரிக்கைகளை இன்னும் ஓரிரு நாட்களுக்குள் திமுக நிறைவேற்றுவதற்கு முன்வருகிறதா இல்லையா என்பதைத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி, இறுதி முடிவினை கட்சியின் நிறுவனத் தலைவர் என்கிற முறையில் நீங்கள் அறிவிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தைத் தலைமைக்குழு கூடி முடிவெடுத்து அதற்கான அதிகாரத்தை எனக்குத் தந்திருக்கிறார்கள்.

அது 234 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்துப் போட்டியிடுவதா அல்லது திமுகவின் பதிலுக்கு ஏற்றவாறு திமுக கூட்டணியில் தொடருவதா அல்லது மற்ற கூட்டணிகளில் இணைவது குறித்து முடிவெடுப்பதா என்பது குறித்துக் கட்சியின் நிறுவனத் தலைவர் என்கிற முறையில் நீங்கள் எடுக்கிற அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாங்கள் இடம்பெற்று வருகிறோம். இந்தக் கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருந்து வருகிறோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன்றைக்குத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுரிமைக்காகக் கடந்த ஐந்து ஆண்டு காலம் சட்டமன்றத்தில் மக்களுக்காக, மக்கள் பிரச்சனைகளுக்காக நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம், போராடி இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் கட்டமைப்புள்ள ஒரு கட்சியாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வளர்ந்திருக்கிறது. ஆதலால் எங்களுக்குரிய கூடுதல் இடங்களைத் தர வேண்டும் என்கிற வேண்டுகோளோடு நாங்கள் கொடுத்திருக்கின்ற இந்தக் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.

இது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் கோரிக்கை.

  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
  • வன்னியர்களுக்கான அந்த 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கப்படுகிறது, அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • தமிழீழ மண்ணில் நடந்த இனப்படுகொலைக்கு என்று ஒரு பொது வாக்கெடுப்பு. நடத்த வேண்டும்.
  • தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கே வழங்குகின்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டிலிருக்கின்ற ஒன்றிய அரசுப் பதவிகளில் 90 சதவீதம் அந்தந்த மாநில மக்களுக்கே அந்த வேலைவாய்ப்பை உறுதி செய்கின்ற ஒரு சட்டம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டிலிருக்கின்ற அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனைகள் தமிழில் நடைபெற வேண்டும்.
  • இங்கே எமது ஈழ உறவுகள், பாஸ்போர்ட் ஆக்ட்ல கைது செய்தவங்க எல்லாம் பல ஆண்டுகளாக 5 ஆண்டு, 10 ஆண்டு, 7 ஆண்டாகத் திருச்சி சிறப்பு முகாமில் சிறைப்பட்டு கிடக்கிறார்கள். இவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என்று சொன்னோம். இதெல்லாம் முதலமைச்சர் கையில் இருக்கிற அதிகாரம். நாளைக்குத் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் நினைத்தாலே அவர்களை நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம். விடுதலை செய்யப்படுபவர்கள் அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
    இதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சரே செய்யக்கூடியது. இதையெல்லாம் நாங்கள் கோரிக்கையாகக் கொடுத்து இன்றைக்குக் கிட்டத்தட்ட 15, 20 நாட்கள் ஆச்சு. ஆனால் இது குறித்து எந்தப் பதிலும் இல்லை. இதெல்லாம் எங்களுடைய மிக முக்கியமான கொள்கைகளாக முன்வைத்திருக்கிறோம்.
  • அதே மாதிரி தமிழ்நாட்டிலிருக்கின்ற அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும். அதற்கு அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து ஒன்றிய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினால் அந்தத் தனியார் லாரி ஓட்டுநர்கள், நேஷனல் பெர்மிட் லாரி ஓட்டுநர்கள் அசோசியேஷன் அவர்களே அதற்கான ஒரு தொகையைச் செலுத்த முன்வரத் தயாரா இருக்காங்க. அவர்களை அழைத்து பேசி இந்தச் சுங்கக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த முதலமைச்சர் முன்வரணும்.
  • 10 ஆண்டு காலமாக நீண்ட நாள் இஸ்லாமிய சிறைவாசிகள் திமுக ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம் என்று சொன்னார்கள், அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  • படிப்படியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

எங்களுக்குக் கூடுதல் இடங்களைக் காட்டிலும், தமிழ்ச் சமூகத்தின் இந்த மிக முக்கியமான இந்த பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு திமுக தலைமையிலான அரசும் அந்தக் கட்சியும் முன்வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

கூடுதல் இடங்களைக் காட்டிலும் நான் கோரிக்கை வைத்த இந்த தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுரிமை இந்தப் பிரச்சனைகளுக்காக, இதைச் செய்து தரக்கூடிய தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடிய அரசியல் கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கலாமா? அப்படின்ற ஒரு விவாதமும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அது மாலை அமர்வுக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை திமுக கிட்ட இருந்து எங்களுக்கு இந்தப் கோரிக்கையை குறித்து எந்தப் பதிலும் வரல அப்படின்னா, இந்தப் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்று பிரதான தமிழ்நாட்டிலிருக்கிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஒன்றுகூடி நாங்கள் வைத்த இந்தப் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இப்ப அதிமுகவோ அல்லது எங்களுக்கு ஒத்த கொள்கை அடிப்படையில் ஒத்த கருத்துள்ள மற்ற அரசியல் கட்சிகளோ முன்வரும் என்று சொன்னால், அவர்களோடு சேர்ந்து தேர்தலில் பயணிப்பதைக் குறித்து மாலை அமர்வில் கட்சி விவாதிக்கத் தயாராக இருக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளும் வேல்முருகன் பதில்களும்:

செய்தியாளர்கள்: அதிமுக உங்க கோரிக்கையை ஏற்கிறோம்னு சொன்னாங்களா? பேச்சுவார்த்தை ஏதாவது நடந்ததா?

வேல்முருகன்: இல்ல, இப்பதான் முதல்முறையா நான் உங்ககிட்ட பத்திரிகையாளர் கிட்டத்தான் இந்தச் செய்தியை நான் வெளியில சொல்றேன். இப்பதான் எங்க கட்சிக்காரங்க நமக்கு சீட்டை விட தமிழ்ச் சமூகத்தின் இந்த மிக முக்கியமான உயிர்நாடி இந்தப் பிரச்சனை சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, இங்கே சிறப்பு முகாமில் அடைபட்டு இருக்கிற ஈழத்தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், இது போன்ற மிக முக்கியமான பிரச்சனை தமிழகத்திற்கு… தமிழ்நாட்டு அரசு வேலை உறுதி… இதையெல்லாம் வந்து இப்பதான் நாங்க பொது வெளியில உங்கள் மூலமாகத்தான் சொல்றோம்.

இதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் எங்களோடு கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கின்ற அரசியல் கட்சிகளோடும், கொள்கை அளவில் உடன்பட்ட அரசியல் கட்சிகளோடும் கூட்டணி தொடரலாமா, செல்லலாமா என்பதை குறித்து மாலை அமர்வில் நாங்கள் முடிவு செய்வோம்.

செய்தியாளர்: தொகுதி உங்களுக்கு முக்கியம் இல்லையா? உங்க கோரிக்கை மட்டும்தான் முக்கியமா?

வேல்முருகன்: தொகுதி முக்கியத்தை விட எங்களுக்கு கோரிக்கை முக்கியம். ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி நாங்க கோரிக்கைக்கு கொடுக்கிறோம்.

செய்தியாளர்: அதிமுக பக்கம் இப்போ பாஜக இருக்கே, ஒருவேளை அதிமுக நாங்க பண்றோம்னு சொன்னா நீங்க என்ன பண்ணப்போறீங்க?

வேல்முருகன்: பாஜக தலைமையிலான அந்த கூட்டணியில நாங்க இடம்பெற மாட்டோம்.

செய்தியாளர்: தமிழ்நாட்டுல அதிமுகவோட தலைமையிலதான கூட்டணி இருக்கு?

வேல்முருகன்: அதிமுக அப்படி சொல்லி எங்களை அழைத்துப் பேசும்போது அது குறித்து மாலை நடைபெறப்போகும் கூட்டத்திற்குப் பிறகு முடிவு செய்வோம்.

செய்தியாளர்: கடந்த வாரம் விருப்ப மனு பெற்றிருக்கீங்க தமிழ்நாடு முழுவதிலும், அது தனித்துப் போட்டியிடுவதற்கான அடையாளமா பார்க்கலாமா?

வேல்முருகன்: ஆமா, 234 தொகுதியிலும் சுமார் கிட்டத்தட்ட 1200க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்று இருக்கின்றன. 234 தொகுதிகளிலும் அந்த வேட்பாளரே ஒரு ஓட்டுப் போட்டாலும் பரவாயில்லை, அது ஒரு ஓட்டோ, 100 ஓட்டோ, 200 ஓட்டோ, 500 ஓட்டோ, 1000 ஓட்டோ அதைப் பற்றிக் கவலை இல்லை. கொள்கை வழி நின்று மக்களைச் சந்திக்கலாம் என்கிற கருத்தும் பெருமளவில் காலையிலிருந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

செய்தியாளர்: சட்டமன்ற உறுப்பினராகவே நீங்க இந்தச் சட்டப்பேரவையிலேயே பேசுவதற்கு அந்த நேரம் குறைப்பு உள்ளிட்டவைகள் எல்லாம் இருக்கும் பொழுது, ரெண்டு நாள் கெடு விதித்திருக்கீங்க, இனிமேலும் உங்க கோரிக்கை ஏற்கப்படுமா?

வேல்முருகன்: ரெண்டு நாள் கெடு எல்லாம் நான் விதிக்கல. ரெண்டு நாளு, ரெண்டு மணி நேரம் கெடு விதிப்பதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே திமுககிட்ட குடுத்திருக்கிறோம். நாங்கள் முதலமைச்சருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று உங்களுக்கு பதில் சொல்லுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று வரையில் அதற்கான பதில் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. நாளைக்கு திங்கட்கிழமை உங்களுக்குத் தகவல் சொல்லுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கட்சி வளர்ந்திருக்கிறது அதற்கு கூடுதல் இடம் கேட்கிறோம். அதே மாதிரி அதையெல்லாம் விட எங்களுக்கு இது மிக முக்கியமான பிரச்சனை. அங்க ஒன்றரை லட்சம் பேர் செத்துப் போயிட்டாங்க, அங்க இனப்படுகொலை ஆயிருக்கு அந்த நாட்டுல. கடந்த காலத்துல அதிமுக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்திருக்கு. அதே தீர்மானத்தை திமுக அரசு ஏன் ஒன்றிய அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்கு முன்வரமாட்டேன்றாங்களே..

தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டுல இருக்குற தமிழர்களுக்கே கிடைப்பதை உறுதி செய்கிற ஒரு சட்டம் இயற்றுவதில் என்ன அவர்களுக்கு சிக்கல் இருக்கு? சரி 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் என்ன சொன்னாங்க, டேட்டாஸ் (Data) இருக்கான்னு தான் கேட்டிருக்காங்க, அதற்கு ஒரு ஆணையம் போட்டீங்க, அந்த ஆணையம் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தல?

சரி சாதிவாரி கணக்கெடுப்பு, இன்னைக்கு ஒரிசாவில நடத்தியிருக்காங்க, தெலங்கானாவில நடத்தியிருக்காங்க, கர்நாடகாவில நடத்தியிருக்காங்க, இந்தியாவில பீகாரில நடத்தியிருக்காங்க, ஏன் தமிழ்நாட்டுல சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்னு திமுக அரசு ஏன் அறிவிக்க மறுக்குறாங்க?

இந்த ஐந்தாண்டு காலம்தான் நீங்க செய்யல, இனியாவது ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

செய்தியாளர்: ஐந்து வருஷமா நீங்க அவங்க கூடத்தான் இருக்கீங்க, அவங்க செய்யாததை இந்த இரண்டு நாள்ல செய்திடுவாங்கன்னு நம்புறீங்களா?

வேல்முருகன்: ஐந்து வருஷமா அவங்க நிறைவேற்றல, அவங்களுக்கு என்ன அரசியல் அழுத்தங்களோ என்னவோ தெரியல. சரி குறைந்தபட்சம் இப்ப திரும்பவும் ஆட்சிக்கு வருகிறோம் என்று சொல்லுகின்ற திமுக தலைமையிலான நாங்கள் இடம்பெற்றிருக்கின்ற இந்தக் கூட்டணி கிட்ட நாங்கள் உரிமையோடு சொல்றோம். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகாலமா சட்டமன்றத்துல உங்க எல்லாருக்குமே தெரியும் நான் சொன்ன இந்த 11, 12 சப்ஜெக்ட்டையும் (Subject) ஒவ்வொரு முறையும் கூட்டத்தொடர்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் பேசிருக்கேனா இல்லையா? வெளில வந்து பத்திரிகையில அட்ரஸ் (Address) பண்ணி சொல்லிருக்கேனா இல்லையா? நான் இதுக்காகத்தான் இந்த கட்சி நடத்துறேன். கட்சியினுடைய பேரே தமிழக வாழ்வுரிமை கட்சி.

உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்வுரிமைக்கான இந்தக் கட்சி. அப்ப இந்தக் கட்சி தொடங்கப்பட்டு 15 ஆண்டுகாலமா இந்தக் கட்சியினுடைய பிரதான உயிர்நாடி கொள்கைகளாக இருக்கிற இந்தப் பிரச்சனைகளை எளிதில நம்முடைய தமிழ்நாடு அரசு நினைச்சா சாத்தியப்படுத்தலாம். இதை ஏன் சாத்தியப்படுத்த முன்வரல? அதனால இப்ப கடைசியா நாங்க வந்து சொல்றோம், நாங்க வந்து பாரதிய ஜனதா தலைமையில போய் கூட்டணி அமைக்க முடியாது. அதனால நாங்க என்ன சொல்றோம், கொள்கை அளவுல இதை நாங்க திமுகவே நாளைக்கு எங்களை அழைத்து இதெல்லாம் நாங்க உங்களுக்கு செஞ்சு தர்றோம், கூடுதல் இடங்களை குறித்து நாங்கள் உங்களோடு பேசுறோம் அப்படின்னு அவங்க பேசி இதெல்லாம் செய்து தர முன்வரட்டும்.

செய்தியாளர்: “திமுகவுல வந்து இப்ப அடுத்தடுத்து நிறைய கட்சிகள் வந்து புதுசா இணைஞ்சிருக்கிறத நம்ம பார்க்கிறோம். ஒருவேளை அத காரணமா வெச்சு ஏற்கனவே இருக்கிற கட்சிகளுக்கு இம்பார்டன்ஸ் (Importance) கொடுக்கல அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா? அதோட கோரிக்கையாதான் இதையும் அவங்க செயல்படுத்த முன்வரலன்னு நீங்க நினைக்கிறீங்களா?

வேல்முருகன்: நம்முடைய அன்பு தமிழ்நாடு முதலமைச்சருக்கு இருக்கிற சங்கடத்தை நான் வந்து அறிவேன். உங்களுக்குத் தெரியும் நிறைய புதிய கட்சிகள் வந்திருக்கு, அவங்களுக்கு உரிய இடங்கள் தரணும். அதனால அந்த இடங்களைப் பத்தி எங்களுக்கு பிரச்சனை இல்லை. நான் தான் சொல்லிட்டேன் உங்களுக்கு. இடங்கள் வந்து கண்டிப்பா எங்களுக்கு கூடுதல் இடம் வேணும். நாங்க ஒன்னும் மற்ற கட்சி மாதிரி எங்களுக்கு 10 குடு, 15 குடு, 20 குடு அப்படிலாம் நாங்க கேட்கல. நாங்க கேட்கிறதே இந்த ஒரு இடத்துல நாங்க நீங்க கொடுத்திருக்கீங்க நின்னு வெற்றி பெற்றிருக்கிறோம், இன்னும் எங்களுக்கு கொஞ்சம் கூடுதல் இடம் கொடுங்க அப்படின்னு நாங்க சொல்றோம். அதுல வந்து கூடுதல் இடம் அது எத்தனை இடம் கொடுத்தாலும் திமுக குடுக்குறத வெச்சு கட்சியினுடைய தலைமைக்குழு கூடி முடிவெடுத்து நாங்க கூட்டணியில அவங்களோடு தொடர்வதற்கு தான் நாங்க விரும்புறோம். ஆனா அதை விட இந்தக் கொள்கை சார்ந்த விஷயம்.

கூட்டணியிலதான் அதிக கட்சி வந்துச்சு, புதிய கட்சி வந்துச்சு, அவங்களுக்கு இடம் கொடுத்துட்டோம், உங்களுக்கு சிரமம் இருக்கு எனக்கு நீங்க செய்ய முடியலன்னு சொல்றீங்க. ஒரு வாதத்திற்கு நாங்கள் அதை ஏற்றுக்கொண்டாலும், அப்ப இந்தக் கொள்கை என்ன இருக்கு? சிறப்பு முகாம் மூடுற அத்தாரிட்டி (Authority) தமிழ்நாடு அரசு கிட்டதான இருக்கு? சரி சிறப்பு முகாம மூட வேண்டாம், டெய்லி (Daily) இன்னைக்கு 20 நாளா சக்தின்ற சக்திநாதன் என்ற ஒரு தம்பி இன்னைக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்குறார்.

பலமுறை அங்க உண்ணாவிரதம் இருக்கிறாங்க. உயிரை கையில பிடிக்கிறாங்க. அப்ப உலகத்துல இருக்கிற பல்வேறு தமிழ்ச் சங்கங்களுக்கு கௌரவத் தலைவரா இருக்கிறேன். இப்போ கூட ஆஸ்திரேலிய மாநாட்டுக்கு போயிட்டு வந்தேன். அங்க இருக்கிற ஒட்டுமொத்த தமிழர்களுடைய கோரிக்கை என்னன்னாக்கா, நீங்க வந்து எங்களுக்கு நாடு வாங்கித் தர்றதெல்லாம் இரண்டாவது இருக்கட்டும்.. முதல்ல உங்க ஊர் முகாம்ல அடைபட்டு கிடக்கிற எங்களுடைய சக மனிதர்களை மனிதர்களா நீங்க மதியுங்க.

எங்க சிறப்பு முகாம்ல அடைபட்டு எந்தவித குற்றச்சாட்டும் இல்லாம, போர்ல குண்டுமழைக்கு பயந்துக்கிட்டு வந்து கள்ளத்தோணியிலயோ இல்ல வேறு விதமாக வந்து இங்க இறங்குனவுடனே பிடிச்சு பாஸ்போர்ட் ஆக்ட்ல கைது செஞ்சிருக்கீங்க. அதுக்கு மேஜிஸ்திரேட் கோர்ட்டோ இல்ல கோர்ட்டோ ஹைகோர்ட்டோ அவங்களை விடுதலை பண்ணப் பிறகு, சிறப்பு முகாம் வாசல்… நீங்க புழல் சிறையிலேயே வச்சு வாசல்லயே வச்சு நீங்க கைது செய்து கொண்டு வந்து சிறப்பு முகாம்ல அடைச்சு வச்சிருக்கீங்க.

ஒருத்தருக்கும் எந்த விசாரணையும் இல்லாம, அந்த அதிகபட்சம் அந்த குற்றத்துக்கு தண்டனையே மூணு மாதம், ஆறு மாசம் தான். அதிகபட்சம் ஒரு வருஷம் தான். அதிகபட்ச தண்டனையே மூணு வருஷங்கள் தான் இந்த குற்றங்கள் புரிந்தவர்களுக்கு அங்க இருக்காங்க. ஆனா அவங்க இன்னைக்கு அஞ்சு வருஷம், ஏழு வருஷம், பத்து வருஷமா உள்ள இருக்காங்க. அவர்களை விடுதலை செய்வதற்கு ஒன்றிய அரசுடைய அனுமதி தேவையே இல்லை. சிறப்பு முகாம்களை மூடுறதுக்குத் தான் ஒன்றிய அரசுடைய அனுமதி. ஆனா இவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசே போதும்.

வட்டாட்சியர் ஒன்று கூடி, க்யூ பிரான்ச் எஸ்பி, அந்த வட்டாட்சியர், அந்த கோட்டாட்சியர் முடிவு பண்ணி முடிவு எடுத்தாலே விடுதலை பண்ணலாம். கடந்த கால அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதாவிடம் நான் முறையிட்டு நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை விடுதலை செய்து அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அதே பாணியைக் கடைபிடிங்க என்றேன்.

அதே மாதிரி இங்க தமிழ்நாட்டுல தாய்மொழி தமிழாகக் கொண்டவர்களையும், தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட அனைத்து மொழிவழி சிறுபான்மை மக்கள், இங்கே ஆண்டாண்டு காலமாக வாழ்கிற எல்லா மக்களுக்கும் இங்க இருக்கிறவங்களுக்கே வேலைவாய்ப்பை நாம வாங்கித் தரணும். அதை விட்டுட்டு நீங்க வந்து எல்லா இன்னைக்கு ஒன்றிய அரசு பதவிகள்ல எல்லா பதவிகளையும் பார்த்தீங்கன்னாக்கா இன்னைக்கு வட மாநிலத்துக்காரரே அமர்த்தப்படுறாங்க.

இன்னைக்கு தமிழ்நாடு அரசுல நீங்க பாருங்க எல்லா பீரோக்ரஸி பாருங்க, யார் டாப் மோஸ்ட் பதவிகள்ல யார் வகிக்கிறா? ஏன் இந்த நாட்டுடைய ஒரு டிஜிபியா ஒரு மிகப்பெரிய உயர்ந்த பதவிகள்ல அமர்வதற்கு தமிழர்களுக்கு தகுதியே இல்லையா? அப்ப இதெல்லாம் எங்களுக்கு வலிகளா இருக்குல்ல? அப்ப இதுக்காகத்தான் நான் தொடர்ந்து சட்டமன்றத்தில் போராடுறேன், வாதாடுறேன், கவன ஈர்ப்பு கொடுக்கிறேன், ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுக்கிறேன், வெளில வந்து பத்திரிகையாளர்கிட்ட அட்ரஸ் பண்ணி சொல்றேன். அப்ப இது எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படல அப்படின்னா அது ரொம்ப வலியா இருக்குல்ல? அதனாலதான் இப்ப நாங்க சொல்றோம் எங்களுக்கு சீட்டை விட தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுரிமைக்கான கோரிக்கை முக்கியம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share