சிலிண்டர் தட்டுப்பாடு : வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model – மு.க.ஸ்டாலின் விளாசல்

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Mar 2026, 12:16 PM

Cylinder

பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

ADVERTISEMENT

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், ஐ.யு.எம்.எல். பொதுச்செயலாளர் அபுபக்கர், வி.சி.க. தலைவர் திருமாவளவன், ம.ஜ.க. தலைவர் தமிமூன் அன்சாரி உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதேபோல் கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரத்தினபுரி பகுதிக்கழகம் பகுதியில், பகுதி கழக செயலாளர் கோவை லோகு முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் பங்கேற்று, ஒன்றிய அரசிற்கு கண்டனங்களை தெரிவித்தார். கேஸ் சிலிண்டருக்கு மாலைபோட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் தாமஸ், மதிமுக செல்வராஜ், சிபிஎம் முருகேசன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.

இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel