73 வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறது பராசக்தி, வேறு கதை வேறு திரைப்படக் குழுவோடு,
Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில்.!
ஜனவரி 14 ஆம் தேதி !
இது குறித்த விளம்பர நிகழ்வில்பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, ” பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்க்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். “என்றார். .
ஜிவி பிரகாஷ் , ” பராசக்தியில் இசையமைப்பில் மீண்டும் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஏற்கனவே பீரயட் படங்களில் மதராஸப்பட்டினம் படம் செய்துவிட்டோம், அதிலிருந்து மாறுபட்டு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வியாக இருந்தது. அதைத் தர உழைத்திருக்கிறோம். இப்படத்தில் ஒரு பீரியட் ஃபீல் இருக்கும். ஒரு பெரிய புரட்சியைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அதை இசையாகக் கொண்டு வர முயற்சித்திருக்கிறோம்.”என்றார்.
நடிகர் அதர்வா, “ஜீவி பிரகாஷின் 100 வது படம், ரவி மோகன் சார் வில்லனாக நடிக்கும் படம், சிவகார்த்திகேயன் சாரின் 25 வது படம். ஶ்ரீலீலாவின் முதல் தமிழ்ப்படம். எனக்கும் முக்கியமான படம்.”என்றார்.
நடிகர் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி, “ஊரே இந்தப் படம் பற்றித் தான் பேசுகிறது. அதர்வாவை இந்தப் படத்தில் கொண்டாடுவீர்கள். அதர்வாவிற்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும். ஶ்ரீலீலாவை ஒரு நல்ல நடிகையாக இப்படத்தில் கொண்டாடுவார்கள். சிவா என்னிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார். ஒரு சின்ன அடிபட்டால் கூட என்னையும் அடித்துக் கொள்ளுங்கள் என்பார். சிவாவின் 25 படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமை. பராசக்தி திரைப்படம் திரைத்துறையில் மிக முக்கியமான படமாக இருக்கும் “என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியபோது , “சுதா மேடம் 1960 களில் நடப்பதாகக் கதை அமைத்திருந்தார். 4,5 வருடம் அவர் உழைத்திருந்தார். அவர் சொன்னதைச் செய்தால் போதும்.அதர்வாவிற்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையான அண்ணன் தம்பி போல தான். அவர் முதல் படத்திற்கு புரமோசன் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வந்தார், நான் தான் ஹோஸ்ட் செய்தேன். இந்தப் படத்தில் சேர்ந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. ரவி மோகன் சார் இந்தப் படத்திற்கு ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியம். ஹீரோவாக கதை கேட்டுத் தேர்ந்தெடுப்பதே கஷ்டம். ஆனால் ஹீரோவாக ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, வில்லனாக ஒத்துக்கொள்வது மிகப்பெரிய விஷயம்.
ஜீவி பற்றி என் அம்மா சொன்னார்கள், அந்தப் பையன் சின்ன வயதிலிருந்து இசையமைக்கிறார் போல 100 படம் செய்துவிட்டார் என்றார். 100 படத்திலும் வித்தியாசமான ஜானர்கள் செய்து அசத்தியுள்ளார். இது எனது 25 வது படமாக நடக்கக் காரணம் ஆகாஷ் தான். அவர் தான் இந்தப் படம் 25ஆவதாக இருக்கட்டும் என்றார். பராசக்தி அருள் தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாத்தையும் பேசும் படமாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும் “என்றார்
தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போர் பற்றிய படம் இது. அதனால் தமிழ்ப் படத்தில் தமிழ் வாழ்க என்ற வாக்கியங்களும் வரிகளும் வருகின்றன.
ஆனால் இந்தப் படத்தில் தெலுங்குப் பதிப்பில் “தெலுகு ஜீவிஞ்சு ” (தெலுங்கு வாழ்க ) என்று போடுகிறார்கள்.
ஆனால் ஆந்திராவில் அப்படி இந்தி எதிர்ப்புப் போராட்டம் எல்லாம் பெரிதாக நடைபெறவில்லை.
சால மண்டி தெலுகுவாரு ஹிந்தி பாக மாட்லாடுதாரு .!
அவர்கள் இந்தியாலும் பலன் பெறுகிறார்கள். இந்தியை எதிர்த்ததாகவும் பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். (இந்த… மதம் மாறுவது போல , மொழி மாற வாய்ப்பு ஏதும் இருந்தா சொல்லுங்கப்பா)
அது மட்டுமல்ல.. கலைஞரின் உறவினர் தயாரித்து , ரெட் ஜெயண்ட் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடும் இந்தப் படத்தின் விழாவில் கலைஞர் பற்றியோ சிவாஜி பற்றியோ யாரும் பெரிதாகப் பேசாததுதான் கொடுமை.
படத்திலாவது மரியாதை தருவார்களா என்று பார்ப்போம்
— ராஜ திருமகன்
