2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாம் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளிடையே இணையவழியில் இன்று ஆலோசனை நடத்திய வேல்முருகன் இதனை அறிவித்தார்.

தவாக நிர்வாகிகளிடம் வேல்முருகன் பேசியதாவது:
தமிழ் சமூகம் சந்தித்த ஒவ்வொரு பிரச்சனைகளும், அது பரந்தூர் விமான நிலைய விவகாரமாக இருக்கலாம், நெய்வேலி நிலக்கரி பிரச்சனையாக இருக்கலாம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு எதிரான போராட்டக் களமாக இருக்கலாம், தமிழ்நாட்டில் நடந்தேறிய பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், கற்பழிப்புச் சம்பவங்கள், காவல்துறையின் மரணங்கள், துப்பாக்கிச் சூடுகள், கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சுகள், எது நடந்திருந்தாலும் நாம் திமுகவோடு கூட்டணியில் இருந்து, திமுகவோடு பயணித்து, அவர்களின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திற்குச் சென்று பணியாற்றிய போது கூட நாம் தமிழ்நாட்டில் நடந்த, மக்களைப் பாதிக்கக்கூடிய, விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய, மாணவர்களைப் பாதிக்கக்கூடிய, தொழிலாளர் வர்க்கத்தைப் பாதிக்கக்கூடிய, மீனவர்களைப் பாதிக்கக்கூடிய, அத்தனை தமிழ் சமூகத்தின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளிலும் நாம் சமரசமற்று போராட்டக் களத்திலும் நின்றோம், தமிழக சட்டமன்றத்திலும் நின்றோம்.
இதை சட்டமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்ற எனது அருமை என்தொப்புள்கொடி உறவுகளுக்கும், தாய்த்தமிழ் உறவுகளுக்கும், என் கட்சியினுடைய நிர்வாகிகளுக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால், சாதாரணப் பாமர மக்களில் இருந்து பல பேர், ‘ஐந்தாண்டு காலம் திமுக கூட்டணியில் பயணித்துவிட்டு திடீரென்று தேர்தல் வருகின்றபோது ஏன் வெளியேறுகிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள்.
பாவம் அவர்களுக்குத் தெரியாது, ஆனால் என் தொகுதியில் இருக்கிற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினுடைய அத்தனை நிர்வாகிகளுக்கும், என் தொகுதியிலே இருக்கிற அத்தனை கிளைகளில் இருக்கிற உறுப்பினர்களில் இருந்து கிளைச் செயலாளர் முதற்கொண்டு நான் பல சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் இப்படியொரு முடிவை நான் எடுக்கவிருக்கிறேன், திமுக சட்டமன்ற உறுப்பினர் என்கிற பதவியை ராஜினாமா செய்து விட்டு, நான் தமிழ்நாடு முழுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கட்டமைப்பிற்குப் பயணிக்கவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்திருந்தேன்.
நம்முடைய கொள்கையும் அவர்களோடு தொடர்ந்து பயணிப்பதில் பல்வேறு சங்கடங்களும், பேரவைத் தலைவருக்கும் எனக்கும் ஆன மோதல், முதலமைச்சருக்கும் எனக்கும் ஆன மோதல், மூத்த அமைச்சர் பெருமக்களுக்கும் எனக்கும் ஆன கடும் வார்த்தைப் பிரயோகங்கள் என்று சொல்லக்கூடிய வாக்குவாதங்கள், பல உயர் அதிகாரிகளுக்கும் எனக்கும் ஆன பிரச்சனைகள், நேரடியாக அவர்கள் அறைகளுக்கே சென்று அவர்களோடு நான் வாதிட்டது, போரிட்டது எனப் பல. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டின் மிக முக்கிய உன்னதமான வாழ்வுரிமைச் சிக்கல்களுக்காகப் பேசியது – நம்முடைய சிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும், ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், இரட்டைக் குடியுரிமைக்கு உரிய அழுத்தங்களைத் தர வேண்டும் – இது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள்.
இங்கு கனிமக் கொள்ளைக்குக் கன்னியாகுமரியில் நாம் அறிவித்த போராட்டம், பொதுக்கூட்டங்கள், அது போன்று மணல் குவாரிகளுக்கு எதிராக நாம் நடத்திய போராட்டங்கள் கடந்த காலங்களில், இது போன்று இங்கு அரசு ஊழியர்களாகப் பணி செய்கின்ற எனது அருமை ஆசிரியப் பெருமக்களுடைய பிரச்சனை, செவிலியர்கள் என்று சொல்லக்கூடிய நம்முடைய மருத்துவப் பணியாளர்களுடைய பிரச்சனை, மருத்துவர்களுடைய பிரச்சனை, அது போன்று பட்டதாரி ஆசிரியர்களுடைய பிரச்சனை, இப்படி கௌரவ விரிவுரையாளர்களுடைய பிரச்சனை, டேங்க் ஆபரேட்டர் என்று சொல்லக்கூடிய கடை நிலையில் இருப்பவர்களுடைய பிரச்சனை, ஊரக எழுத்தர்களுடைய பிரச்சனை, ஊரகச் செயலாளர்களுடைய பிரச்சனை, அது போன்று மக்கள் நலப் பணியாளர்களுக்கான மறு பணி வழங்காத பிரச்சனை – இது போன்று நாம் தொடாத பிரச்சனைகளே இல்லை.
இந்த ஐந்தாண்டு காலம் என்னுடைய முகநூல் பக்கங்களைக் கூர்ந்து கவனிக்கின்ற உறவுகளுக்குத் தெரியும், ஒவ்வொரு நாளும் இந்த தமிழ் சமூகத்திற்கான பிரச்சனைகளைக் குறித்து மிகச்சிறந்த ஒரு அறிவுரைக் குழுமத்தோடு கலந்து ஆலோசனை பேசி, அறிக்கைகளைத் தயாரித்து, அறிக்கைகளை வெளியிட்டு, அது நாட்டு மக்களுக்குச் செய்தியாக்கப்பட வேண்டும் என்று பத்திரிக்கை ஊடகங்களை நாம் வேண்டுகின்றபோது அதை எந்த ஒரு தொலைக்காட்சியும், எந்த ஒரு பத்திரிக்கையும் வெளியிடுவதில்லை, எந்த ஒரு செய்தித் தாள்களும் செய்தியாக வெளியிடுவதில்லை.
ஆக, எந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, எந்த மாதிரி செய்திகளை நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொன்னால் நம்முடைய கொள்கை சார்ந்து பயணித்த இந்த 10 அம்ச கோரிக்கையுடன் நாம் சட்டமன்றத்தில் சந்தித்த அந்த இன்னல்கள், பிரச்சனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என்பதை உணர்ந்த உங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிற வேல்முருகன் தான், தேர்தல் காலத்தில் ஒட்டுமொத்த ஊடகங்களும் ‘யார் யாரோடு கூட்டணி சேர்கிறார்கள்?’, ‘யார் எந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார்கள்?’, ‘என்ன நடக்கப் போகிறது?’ என்று பரபரப்பான செய்திகளுக்காக இலவு காத்த கிளி போல் பல்வேறு பெரிய கட்சிகள், தேசியக் கட்சிகள், திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் வீட்டு வாசல்களிலும், அவர்களுடைய அலுவலகங்களிலும் காத்துக் கிடந்து கொண்டிருந்தார்கள்.
திமுக மீதான வருத்தம்
சில கடலூர் மாவட்டத்தினுடைய திமுகவினுடைய செயற்குழு, பொதுக்குழு ஒன்றிய அளவிலான கூட்டத்தில் அதனுடைய முன்னணி அமைச்சர் பெருமக்களையே வைத்துக்கொண்டு அவர்கள் என்னை குறித்தும், ‘எப்போதும் பார்த்தாலும் கூட்டணிக்கு தந்து விடுகின்றீர்கள் நாங்கள் எப்போது எம்எல்ஏ ஆவது?’ என்று திமுக பிரமுகர்கள் பேசிய பேச்சு அந்த மாவட்டத்தினுடைய அமைச்சர் முன்னிலையிலும், இரண்டு அமைச்சர்கள் முன்னிலையிலும் கடலூர் மாவட்டத்தினுடைய இரண்டு அமைச்சர்கள் முன்னிலையிலும், கடலூர் மாவட்டத்திற்கு பொறுப்பாக வந்த மாண்புமிகு நகராட்சி துறை அமைச்சர் நேரு அவர்கள் இருக்கின்ற மேடைகளிலும் பேசினார்கள்.
அண்ணன் நேரு அவர்களோ அல்லது மூத்த அமைச்சர் பெருமக்களோ அப்படி பேசியவர்களை ‘ஒரு கூட்டணி கட்சித் தலைவர்களை அப்படி விமர்சனம் செய்வது முறையல்ல, பல்வேறு தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள்’ என்று கண்டிக்கவில்லை.
ஆக அப்போது ஏற்பட்ட வருத்தம் நான் என்னுடைய சட்டப்பேரவைத் தொகுதியிலே மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு வருகின்ற போது அதில் கேவலம் என்ன சொல்வார்கள் ஒரு கமிஷன் தொகை என்கிற தொகைக்காக சில நிர்வாகிகள், எல்லா நிர்வாகிகளும் அல்ல திமுகவிலே இருக்கிற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம், அரசு விழாக்களின் மேடைகளை ஆக்கிரமித்த விதம், ஒரு அரசு விழாவில் கோட்டாட்சியரை அமர விடாமல் அந்த கட்சியினுடைய ஒன்றிய செயலாளர் அவரை அவர் இருக்கையிலிருந்து எழுந்து போங்கள் என்று சொல்லிவிட்டு அமர்ந்தது இது போன்ற அரசு விழாக்களிலே தலையிட்டு அவர்கள் உதவித் தொகைகளை அறிவிப்பது பொங்கல் பரிசுகளை அறிவிப்பது இது போன்று அந்த ஆளுங்கட்சி தாங்கள்தான் அப்படி என்கிற அந்த பெரியண்ணன் மனப்பான்மையில் கடைநிலை நிர்வாகிகளில் இருந்து மேல்நிலை நிர்வாகிகள் வரையிலான ஒரு சிலர் நடந்து கொண்ட அந்த வருத்தம்.
சட்டசபை தேர்தலில் போட்டி இல்லை
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் பண்ருட்டியிலே நிர்வாகிகளை அழைத்து ‘இனி நான் பண்ருட்டி தொகுதியிலே தேர்தலில் நிற்கப் போவதில்லை. பண்ருட்டி தொகுதியிலே மட்டும் நிற்கப் போவது இல்லாமல் வருகின்ற இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக நான் அதிலிருந்து விடுபட்டு கட்சிக்கு உழைத்த முன்னணித் தலைவர்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்குகிறேன். ஒருவேளை மீண்டும் நமக்கு பண்ருட்டியில் இடம் கொடுத்தால் கூட கட்சியினுடைய முன்னணித் தலைவர்களை நான் நிறுத்துகிறேன் அல்லது வேறு தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால் அவர்களை நிறுத்துகிறேன். நான் தமிழ்நாடு முழுவதும் பயணித்து கட்சிப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன்.. அதற்காக நீங்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டும்’.. அதனால் விரைவில் பண்ருட்டி தொகுதியில் அனைத்து நிர்வாகிகளுக்குமான ஒரு நன்றியறிவிப்பு பொது மக்களுக்கும் சேர்த்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூட நான் நம்முடைய பண்ருட்டி தொகுதி நிர்வாகிகளை அழைத்துச் சொல்லியிருக்கிறேன்.
அது பண்ருட்டி தொகுதியினுடைய நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் ஏதோ நாம் ஒற்றைச் சீட்டு இருந்தது கூடுதலாக ஒரு இடத்தைக் கேட்டோம், அந்த இடம் தரவில்லை என்பதற்காக வேல்முருகன் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார் என்று பலர் பலவிதமாகப் பேசுகிறார்கள் அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு, உயர்நிலைக் குழு, தலைமைக் குழு விருத்தாசலத்தில் ஓராண்டுகளுக்கு முன்பு நடந்த ஒருங்கிணைந்த மாவட்டத்தினுடைய விருத்தாசலம் மாவட்டத்தினுடைய பொதுக்குழுவில் நான் பேசியது இதெல்லாம் நம் கட்சியினுடைய என்னை நம்பி என்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டு பயணிக்கக்கூடிய என்னுடைய தளபதிகளுக்கும், எனக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நம்முடைய ஜெய்சிங், அஸ்கர் அலி, மாவீரன் வினோத் போன்ற அந்த வீரத் தியாகிகளுடைய ஆன்மாக்களுக்குத் தெரியும். அவர்கள் ‘தலைவர் வாழ்க’ என்று சொன்ன அந்தத் தலைவர் பொதுவாழ்வில் எவ்வளவு நேர்மையானவர், தனிவாழ்வில் எவ்வளவு நேர்மையானவர் என்பது அவர்களுக்குத் தெரியும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
