தேர்தலுக்கு முன் ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?

Published On:

| By Kavi

Will Jana nayagan be released before the election

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ தேர்தலுக்கு முன்பு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், எச்.வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்  ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோரும் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம், சென்சார் பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை.

இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு தீர்ப்பு வழங்கியது.  மத்திய தணிக்கை வாரியம் பதிலளிக்க போதுமான கால அவகாசம் வழங்கி, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் தேதியை பிப்ரவரி 26ஆம் தேதி அறிவித்தது. அதன்படி பார்த்தால் இந்த முறை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளன.

ADVERTISEMENT

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அதன்படி அரசியல் கட்சி தலைவர், வேட்பாளர் அல்லது சித்தாந்தங்களை ஊக்குவிக்கும், பாதிக்கும் உள்ளடக்கத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

அந்தவகையில் இத்திரைப்படம் பிரச்சாரம் நோக்கில் மக்களை சென்றடையும் என்று தேர்தல் ஆணையம் கருதினால் இதற்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்கப்படலாம்.

ஏற்கனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரவாறு படம் வெளியாகவிருந்தது. ஆனால் அதை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.  தேர்தல் ஆணைய முடிவிலும் தலையிட அப்போது உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

ஜனநாயகன் வழக்கை பொறுத்தவரை, இவ்வழக்கில்  பதிலளிக்க மத்திய தணிக்கை வாரியம் 4 வாரம் அவகாசம் கேட்டிருந்தது.  மறு ஆய்வு குழு அமைக்கப்படுமானால், அந்த குழு அமைக்க 20 நாட்கள் தேவைப்படும், அதன்பிறகு அக்குழு படம் பார்த்து சான்றிதழ் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யும் என்று கூறியிருந்தது.

எனவே தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகம் வெளியாவது சிக்கல் தான் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அறிவித்து அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய்க்கு, “ஜனநாயகன்” திரைப்படம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஒரு அரசியல் பின்னணியைக் கொண்ட இத்திரைப்படம், தேர்தலுக்கு முன்னர் வெளியானால், விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share