மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்கள் அடித்துள்ள நிலையில், அவர் இன்று (அக்டோபர் 11) தனது மூன்றாவது இரட்டைச் சதத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சுப்மன் கில் (20) களத்தில் உள்ளார்.
முதல் நாள் ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், 253 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 173 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் சதம் அடிப்பது இது ஏழாவது முறையாகும். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 150-க்கும் மேற்பட்ட ரன்களை அவர் கடப்பது இது ஐந்தாவது முறை. இதன்மூலம் 23 வயதாவதற்கு முன் ஐந்து முறை 150+ ஸ்கோரை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக இன்று இரட்டை சதத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ’மிகக் குறைந்த வயதில் மூன்றாவது இரட்டை சதம் அடித்த முதல் வீரர்’ என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைப்பார்.
அவர் தவிர, கே.எல். ராகுல் 38 ரன்களும், சாய் சுதர்சன் 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.