தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் இலவசங்கள் மற்றும் மானியங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 19) கேள்வி எழுப்பியுள்ளது. இந்த அறிவிப்புகளுக்கான செலவு சுமையை வரி செலுத்துவோரே சுமக்கின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 2024 மின்சார திருத்த விதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘இந்த புதிய விதியை அமல்படுத்தினால், மின்சாரக் கட்டணம் மிகக் கடுமையாக உயரும். இது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கும். அரசுக்கும் இழப்பு ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இவ்வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 19) தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, நீதிபதி விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘இலசவசங்கள் அல்லது மானியங்கள் கொடுக்கும் நடைமுறை இன்னும் எத்தனை நாளைக்கு தொடரும். வசதி உள்ளவர்கள், வசதி இல்லாதவர்கள் என்று எந்தப் பாகுபாடும் காட்டாமல், அனைவருக்கும் அரசுச் சலுகைகளை வாரி வழங்குகிறது. இவ்வாறு செய்வது திருப்திப்படுத்தும் அரசியல் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை. இந்த நடைமுறை நீடிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
நாங்கள் தமிழ்நாட்டை மட்டும் சொல்லவில்லை, அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டுதான் சொல்கிறோம். நாம் எத்தகைய கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறோம்? சமீபத்தில் நடந்த தேர்தல்களில் சில மாநிலங்களில் என்ன நடந்தது என்பது தங்களுக்குத் தெரியும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.
மக்கள் கைகளில் இப்படி நேரடியாக பணம் வழங்கும் திட்டங்களை அறிவித்து கொண்டே இருந்தால் மக்கள் வேலைதான் செய்வார்களா?
இவை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்வது பொதுநலனுக்கு உகந்ததா? மின்சாரக் கட்டணம் செலுத்த வசதியுள்ளவர்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?
ஏழை எளிய மக்களுக்கு நீங்கள் நிவாரணம் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால் பணக்காரர்களுக்கும், ஏழைக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது.
உங்கள் மாநிலம் உபரி வருவாய் கொண்ட மாநிலமாகவே இருக்கட்டும். அந்த பணத்தை ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவது உங்கள் கடமை அல்லவா? இந்த பணத்தை சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தலாமே… ஆனால் நீங்கள் உணவுக்கும் உடைகளுக்கும் மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்…
தேர்தல் நேரத்தில் மக்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள்.
வசதியற்றவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. வசதியில்லாத மாணவர்களை படிக்க வைக்கலாம். மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல வசதியில்லாத மாணவர்களுக்கு உதவலாம்.
ஆனால், அனைத்து வசதிகளும் கொண்ட, ஆடம்பரமாக வாழும் செல்வந்தர்களுக்குக் கூட இந்த இலவசங்கள் முதலில் போய்ச் சேர்கின்றன. இத்தகைய கொள்கை முடிவுகளைமாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இதுபோன்ற திட்டங்களில் சம நிலை இருக்க வேண்டும்.
மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் இருந்தும், மக்களுக்கு இப்படிப் பணத்தை வாரி வழங்குவதுதான் எங்கள் கவலை. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் இந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கக் கூடாது?.
மக்கள் சுயமாக உழைத்து சம்பாதித்து, அதன் மூலம் கவுரவமாக வாழ வேண்டும். அதற்கு தேவையான வேலைவாய்ப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும்.
அதை விடுத்து, காலையிலிருந்தே இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் என அனைத்தையும் வழங்கத் தொடங்கினால்… மக்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகப் பணத்தை அனுப்பினால், அவர்களுக்கு வேலைக்கு போக வேண்டும் என எப்படி தோன்றும்” என்று கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மனுவை ஏற்றுக்கொண்டநீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
