டிஜிட்டல் திண்ணை: நம்பவைத்து ஏமாற்றிய மோடி- செம்ம அப்செட்டில் எடப்பாடி- ஓபிஎஸ்-க்கும் ஆப்பு- பரபர பின்னணி!

Published On:

| By Minnambalam Desk

why modi show not interest to meet eps and ops

வைஃபை ஆன் செய்ததும் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடலை பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

மோடியின் தமிழக விசிட் ரொம்ப எதிர்பார்ப்பாக இருந்ததே?

ADVERTISEMENT

ஆமாம்.. பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம், அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் திட்டமிடப்படுவதாக நாமும் மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்..

ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் போனதில் எடப்பாடி பழனிசாமி தரப்புதான் இப்போ ரொம்ப அப்செட்.

ADVERTISEMENT

என்னதான் நடந்தது?

தமிழக நிலவரம் தொடர்பான அமித்ஷா டீம் சர்வேயில், திமுக கூட்டணிக்கு 140 இடங்களும் அதிமுக அணிக்கு 90 இடங்களும் கிடைக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை வைத்துதான் தமிழக வருகையின் போது எடப்பாடி பழனிசாமியை தனியே சந்தித்து கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறார் பிரதமர் மோடி என முதலில் கூறப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பும் உற்சாகமாகி, மோடியிடம் என்ன விஷயங்களைப் பேசுவது என ஆலோசனை நடத்தியது. மோடியை தனியே சந்தித்து பேசும் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், ஓபிஎஸ் அணியை ஏன் அதிமுகவில் சேர்க்கவே முடியாது? அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற்றால் கூட்டணி வலுவாக அமையும்? என்பது குறித்து விவரிப்பதற்கும் எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தாராம். அதிமுகவின் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோருடன் இதுபற்றி எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையும் நடத்தி இருந்தார்.

ADVERTISEMENT

திருச்சி Marriott Hotel-ல் ஜூலை 26-ந் தேதி இரவு அல்லது ஜூலை 27-ந் தேதி காலையில் ஏதாவது ஒரு நேரம் ஒதுக்கி எடப்பாடியை தனியே சந்தித்து பேசுவார் மோடி எனவும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் எல்லாமே தலைகீழாகப் போனதே..

தமிழகத்தில் ஜூலை 26-ந் தேதி இரவு தூத்துக்குடி விமான நிலையத்தில் தொடங்கி ஜூலை 27-ந் தேதி திருச்சி விமான நிலையத்தில் வழியனுப்பும் வரை பிரதமர் மோடி மொத்தம் 13 இடங்களில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவங்கர், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டிஆர் பி ராஜா மற்றும் அதிகாரிகள் என அரசு தரப்பில் 20 பேர் கொண்ட பட்டியல் தனியாக கொடுக்கப்பட்டிருந்தது.

இது அல்லாமல் பாஜக பிரமுகர்கள், அதிமுகவின் தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ, தாமரை ராஜேந்திரன், பாஜக கூட்டணி தலைவர்களான ஏசி சண்முகம், ஜிகே வாசன் உள்ளிட்ட 216 பெயர்களைக் கொண்ட இன்னொரு லிஸ்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த 216 பேர் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் எப்படியும் பிரதமர் மோடி, திருச்சி ஹோட்டலில் தங்களை தனியே சந்தித்துப் பேசுவார் என்ற பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்தது எடப்பாடி தரப்பு.

வெளியூரில் இருந்த எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் திருச்சிக்கு வந்து முகாமிட்டு காத்திருந்தனர். தூத்துக்குடியில் ஏற்கனவே திட்டமிட்டபடி பிரதமர் மோடியை அமைச்சர்கள், பிரமுகர்கள் சந்தித்தனர்.

தூத்துக்குடி நிகழ்ச்சி முடிந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திருச்சி விமான நிலையத்தில் மோடியை வரவேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் தங்களை மோடி சந்திக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக தலைவர்களும் வேகமாக சென்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் நடந்ததே வேறயாம்..

திருச்சி ஏர்போர்ட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மதிமுக துரை வைகோ எம்பி ஆகியோரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர். மோடியும் ரொம்பவே சிரித்த முகத்துடன் எடப்பாடியின் வரவேற்பை ஏற்க, அவரது முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு வெளிப்பட்டது.

பிரதமர் மோடி, பொதுவாகவே இப்படியான வரவேற்புகளில் 5 முதல் 10 வினாடிகள் மட்டுமே.. அதாவது போட்டோ எடுக்கக் கூடிய நேரம் மட்டும்தான் ஒதுக்குவார்.. அந்த வினாடிகளுக்குள்தான் தோளில் கை போடுவது, கையை இறுக்கமாக பிடிப்பது என்பது நடக்கும். அப்படித்தான் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கும் அப்படி சில வினாடிகள்தான் ஒதுக்கப்பட்டது.

இதன் பின்னர் திருச்சி விமான நிலையத்திலும் தனியே மோடியை சந்திக்க நேரம் தரப்படவில்லை; திருச்சி ஹோட்டலிலும், மோடியுடனான எடப்பாடி சந்திப்பு இல்லை என்பதும் உறுதியாகிப் போனது.

இப்படி பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து, என்னவெல்லாம் பேசுவது என ரெடியாக இருந்தும் ஏசி சண்முகம், ஜிகே வாசன் போல நம்மையும் – ‘பத்தோடு பதினொன்று’ என்ற கணக்கில் டெல்லி சேர்த்துவிட்டதே என ரொம்பவே அப்செட்டானராம் எடப்பாடி பழனிசாமி. டெல்லி இப்படி செய்யும் என நினைத்துகூட பார்க்கவில்லையே என எடப்பாடியுடன் இருந்த அதிமுக ‘தலை’களும் கொட்டி குமுறிவிட்டனராம்.

இதனைத்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திருச்சி ஏர்போர்ட்டில் நியூஸ் J செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “மோடியை சந்தித்தோம். சிறப்பான முறையில் வரவேற்றோம்.. அவரும் எங்களுக்கு நல்ல சிறப்பான மரியாதை கொடுத்தார்” என பூசி மெழுகிப் பேசியிருந்தார் எடப்பாடி.

எடப்பாடியை இப்படி அப்செட் செய்ய ஏதாவது ஒரு காரணம் இருக்கனுமே?

டெல்லியின் இந்த முடிவுக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறதாம்.. அதில், இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமியை கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போம் என்ற அணுகுமுறைதான் முக்கியமாம்.

என்னதான் செய்தாராம் எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமியின் அண்மைய மேடை பேச்சுகள் குறிப்பாக, “ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர அதிமுக ஏமாளி அல்ல; தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை; அதிமுக தனிப்பெரும் பலத்துடன் ஆட்சி அமைக்கும்; கூட்டணியில் பிரம்மாண்டமான கட்சி இணையப் போகிறது” என்ற பேச்சுகளை எல்லாம் டெல்லி ரசிக்கவே இல்லையாம்.

அத்துடன் எடப்பாடி மீது தீராத சந்தேகமும் டெல்லிக்கு நீடிக்கிறதாம்..

அது என்ன சந்தேகம்?

பாஜகவுடன் இப்போதைக்கு கூட்டணி வைத்திருந்தாலும் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவை கழற்றிவிட்டு விட்டு நடிகர் விஜய்யின் தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமோ என்ற சந்தேகம்தானாம் அது.

இப்படியான காரணங்களால்தான் இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமியை போகிற போக்கில் ‘டீல்’ செய்வோம்.. பின்னர் ‘ஸ்டிராங்கா’ டீல் செய்வோம் என்ற முடிவெடுக்கப்பட்டதாம்.. இதனால்தான் எடப்பாடியை மோடி சந்திக்கவும் இல்லையாம்.

அத்துடன் இன்னொரு குமுறலும் எடப்பாடி தரப்பில் இருந்து கொட்டப்படுகிறது…

அது என்னவாம்?
மோடியின் நிகழ்ச்சிகளில் மேடையில் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டார்; அப்படி நயினார் நாகேந்திரனை அமர வைக்கிற போது, அதிமுக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற அடிப்படையிலாவது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான தம்மை மேடையில் அமர வைத்திருக்கலாமே.. அப்ப இன்னமும் நம்மை முதல்வர் வேட்பாளராக டெல்லி ஏற்காமல்தான் இருக்கிறதா? என குமுறுகிறதாம் எடப்பாடி தரப்பு.

ஓஹோ.. ஓபிஎஸ் அப்படி கெஞ்சியும் மோடியை சந்திக்க நேரம் தரவில்லையே..

மோடியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்பதில் ஓபிஎஸ் ரொம்பவே தீவிரம் காட்டினார். இதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணாமலை ஆகியோரிடமும் ஓபிஎஸ் பேசினார். அவர்கள் கொடுத்த ஐடியாவில்தான், “தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனிமரியாதை மற்றும் பாக்கியம்” என மோடிக்கு கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்-ன் இந்த கடிதம் கேலிக்குரியதாக மட்டுமல்ல.. அவரது நெருங்கிய சகாக்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோரையும் ரொம்பவே கொந்தளிக்க வைத்துவிட்டதாம். அத்தனை பேரும் ஒரு சேர ஓபிஎஸ் மீது ‘செம்ம காண்டாக’ இருக்கின்றனராம்.. இது பற்றி கேட்டால், “மோடிக்கு கடிதம் அனுப்ப சொன்னால் ஏதோ ஜெயலலிதா அம்மையாருக்கு அனுப்பி வைப்பது போல ஓவராக கெஞ்சி இறங்கிப் போய் ஓபிஎஸ் எழுதி இருப்பதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?” என தகிக்கின்றனர்.

ஓபிஎஸ்-ன் இந்த சரணாகதி கடிதமும் ஒர்க் அவுட் ஆகாமல் போனதால், பாஜகவை நம்பி நட்ட நடுத்தெருவில் புலம்பத்தான் வேண்டியிருக்கிறது எனவும் சீறுகின்றனர் அவரது சகாக்கள். அத்துடன் ஓபிஎஸ் அணி, திருச்சியில் நடத்த இருந்த மாநாட்டையே ரத்து செய்துவிட்டதாம்.

இப்படி ஓபிஎஸ் பெயில் ஆகிப் போனதால்தான், நடிகர் விஜய் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என வெளிப்படையாகவே பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினாராம்.

ஓபிஎஸ் உடனான கூட்டணி பற்றி விஜய் தவெக தரப்பு என்ன நினைக்கிறதாம்?

இது பற்றி தவெக வட்டாரங்களில் பேசிய போது, “பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி எப்படியும் விலகி விடுவார் என நினைக்கிறோம். தவெகதான் அவருக்கு இருக்கும் ஒரே சாய்ஸ். நிலைமை அப்படியிருக்கும் போது அதற்கு முட்டுக் கட்டை போடுவது போல ஓபிஎஸ்- உடன் நாங்க ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.. அப்படி பேச்சுவார்த்தை நடத்தினால் இபிஎஸ் கோபப்படுவார் அல்லவா? அது எங்களுக்கு தெரியாதா? அதனால்தான் அமைதி காக்கிறோம்” என்கின்றனர்.

“பாஜகவை நம்பிய அதிமுகவின் இரு தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர்செல்வமும் என்ன கதியில் நிற்கிறார்கள் பாருங்கள்” என திமுக கூட்டணித் தலைவர்கள் கமுக்கமாக சிரிக்கின்றனர்..
ஆனால் ‘பாஜகவுக்கு பதிலடி தருவோம்’ என எடப்பாடி முடிவெடுத்துவிட்டால் அப்ப தெரியும் ‘சிவனோட’ ஆட்டம் என புதிர் போடுகின்றனர் அதிமுகவின் சீனியர்கள் என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share