ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் ஏன் தேவை? ஸ்டாலினிடம் சண்முகம், முத்தரசன், திருமாவளவன் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

CM Meet Alliance leaders

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான பெ.சண்முகம் (சிபிஎம்), முத்தரசன் (சிபிஐ), தொல்.திருமாவளவன் (விசிக) மூவரும், ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தின் (Law against Caste Honour Killing) தேவை குறித்து விவரித்தனர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி- சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது: ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என நாங்கள் மூவரும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தோம். ஏற்கனவே ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.

இதேபோல ஒரு சட்டத்தின் தேவையை தேசிய பெண்கள் ஆணையம், உச்சநீதிமன்ற- உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வலியுறுத்தி உள்ளன. ஆகையால் தமிழ்நாடு அரசும் ஜாதி ஆணவக் கொலையை தடுப்பதற்கான தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது.

இந்த விளக்கங்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் எங்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஜாதிய மேலாதிக்க, ஜாதிய வெறி கொண்ட சக்திகள் நடத்தும் இத்தகைய படுகொலைகள் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் அதிகரித்திருக்கிறது. வழக்கமான கொலை தொடர்பான சட்டங்கள், ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதாக இல்லை; ஆகையால் கொலையில் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வகை செய்யும் ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்: ஜாதி ஆணவக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பது கவலைக்குரியது. ஒரே ஜாதியில் காதலித்தாலும் கூட குடும்ப கவுரவப் பிரச்சனையாக கருதும் மனநிலையும் இருக்கிறது. இத்தகைய கொலைகள் அதிகரித்து வருகின்றன. சமூக நீதி, பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கு- ஜாதி ஆணவக் கொலைகள் அழகல்ல; ஆகையால் இதனைத் தடுக்க வேண்டும்; ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மூன்று கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்ட மனுவை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசும் இத்தகைய சட்டத்தின் தேவையை உணர்ந்துள்ளது. ஆகையால் விரைவாக, ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவது நல்லது. ஜாதி ஆணவத்துடன் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த இத்தகைய சட்டம் உதவும் என்பதையும் முதல்வரிடம் விவரித்தோம். ஆகையால் இதற்கான சட்டத்தை கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ADVERTISEMENT

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி: ஏற்கனவே இருக்கிற சட்டங்களே போதுமானது; புதிய ஜாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டம் தேவை இல்லை என பேசப்படுகிறது. ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம்- சிறப்புச் சட்டம் தேவை என்பதை கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு அமைப்புகள் – ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வருகின்றன. இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போது இதனை சுட்டிக்காட்டினோம்.

ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் தேவை என தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்துள்ளது. 2010-ம் ஆண்டு இப்படி ஒரு சட்டம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு இந்த சிறப்பு சட்டம் தேவை என சட்ட ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2015-ம் ஆண்டு சிபிஎம் கட்சியின் சார்பில் இத்தகைய சட்டம் தேவை என ஆர். சவுந்தரராஜன் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ராமசுப்பிரமணியம், இத்தகைய தனிச் சட்டம் தேவை என்பதை ஒரு தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார். 2017-ம் ஆண்டு மாநிலங்களவையில் விஜய் ஷா எம்பி, இதே போல ஒரு சட்டம் தேவை என ஒரு தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.

2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், இத்தகைய சிறப்பு சட்டத்தின் தேவையை வலியுறுத்தி தீர்ப்பு அளித்துள்ளது. இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படும் வரை மாநில காவல்துறை எப்படி செயல்பட வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களையும் அந்த தீர்ப்பு விரிவாக வழங்கி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதேபோல ஒரு சட்ட மசோதா 2023-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த அனைத்தையும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று சுட்டிக் காட்டி உள்ளோம். எனவே முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இது எஸ்சி- எஸ்டி அல்லாதவருக்கு இடையேயான பிரச்சனை அல்ல. ஒரு சமூகப் பிரச்சனை. அனைத்து ஜாதிகளிலும் காதல் திருமணம் நடந்தால் படுகொலைகள் நடக்கின்றன. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடக்கிறது. இதற்கு தேசிய அளவில் சட்டம் தேவை என்றாலும் கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதால் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ந் தேதி நடைபெறும் போது இந்த சட்டம் கொண்டுவரப்படுமா? என்பது தெரியாது. அமைச்சரவையில் என்ன பேசுவார்கள் என்பது தெரியாது. இந்த சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்த விசிகவின் போராட்டங்கள் நடைபெறும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share